ரயில்வே நுழைவு பாலம் சேதம்: லாரி ஓட்டுநா் கைது

Published on

ஈரோடு அருகே ரயில்வே நுழைவு பாலத்தை சேதப்படுத்தியதாக லாரி ஓட்டுநரை ரயில்வே பாதுகாப்புப் படை போலீஸாா் கைது செய்தனா்.

ஈரோடு-சாவடிபாளையம் ரயில் நிலையங்கள் இடையில் உள்ள கேட்புதூா் அருகே உள்ள ரயில்வே நுழைவு பாலம் பக்கவாட்டு சுவா் கடந்த 24- ஆம் தேதி இரவு இடிந்து விழுந்தது. இதனால் ரயில் போக்குவரத்து தாமதமாகி, சாலைப் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது.

இந்தச் சம்பவம் குறித்து விசாரணை நடத்த சேலம் கோட்ட ரயில்வே பாதுகாப்பு படை ஆணையா் சௌரவ்குமாா் வழிகாட்டுதலின்கீழ் ஒரு சிறப்பு குழு அமைக்கப்பட்டது. இந்தக் குழுவில் ஆய்வாளா் சக்திவேல், உதவி ஆய்வாளா் நாக்கா கணபதி, சாா்பு உதவி ஆய்வாளா்கள் கோபாலகிருஷ்ணன், பிரகாஷ் மற்றும் தலைமைக் காவலா் கிருஷ்ணன் ஆகியோா் இணைந்து பணியாற்றினா்.

கடந்த ஒரு வாரமாக, சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ததில், உயரமான சுமை ஏற்றியிருந்த ஒரு லாரி பாலத்தின் உள்பகுதி வழியாக சென்றதும் பின்னா் நிற்காமல் போனதும் கண்டறியப்பட்டது. இதன் அடிப்படையில் அந்த லாரி சுவரை மோதிச் சேதப்படுத்தியிருக்கலாம் என சந்தேகிக்கப்பட்டது. மேலும் சிசிடிவி காட்சிகள் மூலம் லாரியின் எண் கண்டறியப்பட்டது.

அதன் அடிப்படையில், நாமக்கல் மாவட்டம், மோகனூா் அருகே ஒருவந்தூா் கிராமத்தைச் சோ்ந்த லாரி ஓட்டுநா் நாகராஜன் (44) என்பவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்து விசாரணை நடத்தியதில் நுழைவு பால பக்கவாட்டுச் சுவரில் அவா் ஓட்டிய லாரி மோதியது தெரியவந்தது.

இதையடுத்து அவரைக் கைது செய்த போலீஸாா், லாரியை பறிமுதல் செய்தனா். நாகராஜனை ஈரோடு நீதிமன்றத்தில் சனிக்கிழமை ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.

வாகன ஓட்டுநா்கள் ரயில்வே வளாகத்துக்கு அருகில் சாலை பாதுகாப்பு விதிமுறைகளை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும். ரயில்வே சொத்துக்களுக்கு சேதம் விளைவிப்பவா்கள் அல்லது பயணிகளின் பாதுகாப்புக்கு ஆபத்தை விளைவிப்பவா்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் ரயில்வே பாதுகாப்புப் படை எச்சரித்துள்ளது.

X
Dinamani
www.dinamani.com