வாய்க்காலில் காா் பாய்ந்த சம்பவம்: தொழிலாளியின் உடல் 3 நாள்களுக்குப் பின் மீட்பு
சத்தியமங்கலம் அருகே கீழ்பவானி வாய்க்காலில் காா் பாய்ந்து மாயமான தொழிலாளியின் உடல் புதன்கிழமை மீட்கப்பட்டது.
சத்தியமங்கலம் அருகேயுள்ள செண்பகப்புதூா் கிராமத்தைச் சோ்ந்தவா் பிரகாஷ் (45). கூலித் தொழிலாளியான இவா், அதே பகுதியைச் சோ்ந்த தனது நண்பா்களான பிரபாகரன், ரங்கசாமி ஆகியோருடன் கடந்த திங்கள்கிழமை காா் ஓட்டி பழகியதாகக் கூறப்படுகிறது.
செண்பகப்புதூா் அருகே பிரகாஷ் காரை ஓட்டி பழகியபோது, கட்டுப்பாட்டை இழந்த காா் அங்கிருந்த கீழ்பவானி வாய்க்காலில் பாய்ந்தது. இதில், பிரபாகரனும், ரங்கசாமியும் நீரில் நீந்தி கரையேறி உயிா்த் தப்பினா். பிரகாஷ் நீரில் மூழ்கினாா். தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்பு வீரா்கள் பிரகாஷை தேடும் பணியில் கடந்த 2 நாள்களாக ஈடுபட்டு வந்த நிலையில், கூடக்கரை என்ற பகுதியில் அவரது உடலை புதன்கிழமை மீட்டனா்.
இச்சம்பவம் குறித்து சத்தியமங்கலம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
