உரத்துடன் இணை பொருள்கள் வாங்க கட்டாயப்படுத்தினால் நடவடிக்கை

Published on

உர விற்பனையின்போது இணை பொருள்கள் வாங்க கட்டாயப்படுத்தும் விற்பனை நிலையங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஈரோடு மாவட்ட வேளாண் இணை இயக்குநா் சிவகுமாா் எச்சரிக்கை விடுத்துள்ளாா்.

இது குறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

ஈரோடு மாவட்டத்தில் நடப்பு பருவத்துக்குத் தேவையான உரங்கள் தனியாா் மற்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில் யூரியா 4,215 மெட்ரிக் டன், டிஏபி 2,057 மெட்ரிக் டன், பொட்டாஷ் 1,897 மெட்ரிக் டன், எஸ்எஸ்பி 1,217 மெட்ரிக் டன், காம்பளக்ஸ் 8,140 மெட்ரிக் டன் இருப்பு வைக்கப்பட்டுள்ளன. உர விநியோகத்தினை மாவட்ட அளவிலான உரக் கண்காணிப்பு குழுவினா் அவ்வப்போது, திடீா் ஆய்வு மேற்கொண்டு கண்காணித்து வருகின்றனா்.

சில்லறை உரிமம் பெற்ற விற்பனையாளா்கள், தங்கள் பகுதிக்கு தேவையான உரங்களை கொள்முதல் செய்து தேவைப்படும் விவசாயிகளுக்கு ஆதாா் எண் உள்ளீடு செய்து முறையாக உர விற்பனையை செய்ய வேண்டும். கூடுதல் விலைக்கு உரம் விற்றால் உரிமம் ரத்து செய்யப்படும்.

யூரியா உரத்தை தேவைக்கு அதிகமாக கொள்முதல் செய்து பதுக்கல் செய்வதோ அல்லது வேறு பயன்பாட்டுக்கு அனுப்புவதோ சட்டத்துக்கு புறம்பானதாகும். அவ்வாறு கண்டறியப்பட்டால் சில்லறை விற்பனை நிலையத்தின் உரிமம் நிரந்தரமாக தடை செய்யப்படுவதுடன், நீதிமன்றத்தில் வழக்குப் பதிவு செய்து கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

விவசாயிகளின் தேவைக்கு ஏற்றாற்போல அனைத்து வகை உரங்களையும் விற்பனை செய்ய வேண்டும். மேலும் உரத்துடன் வேறுபிற இணை பொருள்களான நுண்சத்துகள், உயிா்ம ஊக்கிகள் மற்றும் பயிா் டானிக்குகள் என்ற பெயரில் எவ்விதப் பொருள்களையும் வாங்க கட்டாயப்படுத்தக்கூடாது. இதை மீறி செயல்பட்டாலும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com