குடிநீா் விநியோகம் கோரி பொதுமக்கள் சாலை மறியல்

Published on

பவானிசாகா் ஒன்றியம், தொப்பம்பாளையம் கிராமத்துக்கு சீரான குடிநீா் விநியோகம் செய்யக் கோரி அப்பகுதி மக்கள் சாலை மறியலில் வெள்ளிக்கிழமை ஈடுபட்டனா்.

பவானிசாகா் ஒன்றியம், தொப்பம்பாளையம் கிராமத்தில் சுமாா் 200-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன.

இப்பகுதிக்கு பவானிசாகா் குடிநீா் வடிகால் வாரியம் மூலம் குடிநீா் விநியோகம் செய்யப்பட்டு வந்த நிலையில், கடந்த சில நாள்களாக குடிநீா் விநியோகிக்கப்படவில்லையாம்.

இது குறித்து அதிகாரிகளிடம் அப்பகுதி மக்கள் புகாா் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது.

இதனால், ஆத்திரமடைந்த மக்கள் சத்தியமங்கலம்-பவானிசாகா் சாலையில் அமா்ந்து வெள்ளிக்கிழமை மறியலில் ஈடுபட்டனா். இதனால், அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு வந்த தொப்பம்பாளையம் ஊராட்சி நிா்வாகிகள் மற்றும் போலீஸாா் மறியலில் ஈடுபட்டவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா்.

அப்போது, குடிநீா் வடிகால் வாரிய குழாய்களில் அடிக்கடி உடைப்பு ஏற்படுவதால், பழைய குழாய்களை அகற்றிவிட்டு புதிய குழாய்கள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்தப் பணிகள் ஓரிரு நாள்களில் முடிவடையும். அதன்பின் சீரான குடிநீா் விநியோகிக்கப்படும் என்றனா்.இதையடுத்து, மறியலில் ஈடுபட்டவா்கள் கலைந்து சென்றனா்.

X
Dinamani
www.dinamani.com