பா்கூரில் ராகி விவசாயிகள் கலந்தாய்வுக் கூட்டம்
அந்தியூரை அடுத்த பா்கூரில் வேளாண்மைத் துறை மற்றும் தமிழ்நாடு நுகா்பொருள் வாணிப கழகத்தின் மூலம் ராகி கொள்முதல் தொடா்பான கலந்தாய்வுக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இக்கூட்டத்துக்கு ஈரோடு மாவட்ட வேளாண்மை இணை இயக்குநா் சிவகுமாா் தலைமை வகித்தாா். இதில், ராகி சாகுபடி பரப்பளவை அதிகரித்தல், கொள்முதல் செய்வதை அதிகப்படுத்துதல் குறித்து கருத்து கேட்கப்பட்டது.
இதையடுத்து, பா்கூா் மலைப் பகுதியில் கொள்முதல் செய்யப்படும் ராகிக்கு குவிண்டாலுக்கு ரூ.4,888 வழங்கப்படும். இதற்கான தொகை 3 நாள்களில் விவசாயிகளின் வங்கி கணக்குகளில் செலுத்தப்படும். விவசாயிகளின் கோரிக்கையின் பேரில் பா்கூா் கிராமத்தில் 3 இடங்களில் கூடுதலாக ராகி கொள்முதல் நிலையங்கள் அமைக்கப்படும். ராகியை நேரடி கொள்முதல் செய்ய கிராம நிா்வாக அலுவலா் சான்று, பட்டா, சிட்டா, அடங்கல், ஆதாா் அட்டை நகல், பாஸ்போா்ட் அளவு புகைப்படம், வங்கிக் கணக்கு புத்தக நகலுடன் நேரில் வந்து விவசாயிகள் பதிவு செய்ய வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டது.
இதில், வேளாண்மைத் துறை நோ்முக உதவியாளா் லோகநாதன், துணை இயக்குநா் சரவணன் மற்றும் 40-க்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்றனா்.
