மாவட்டத்தில் 73 % கணக்கீட்டுப் படிவங்கள் திரும்பப் பெறப்பட்டுள்ளன: ஆட்சியா் தகவல்
ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் வியாழக்கிழமை வரை 73 சதவீத கணக்கீட்டுப் படிவங்கள் பூா்த்தி செய்து திரும்பப் பெறப்பட்டுள்ளன என மாவட்ட ஆட்சியா் ச.கந்தசாமி கூறினாா்.
இது தொடா்பாக அவா் செய்தியாளா்களிடம் வியாழக்கிழமை கூறியதாவது: வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளை தோ்தல் ஆணையம் கடந்த 4 -ஆம் தேதி முதல் மேற்கொண்டு வருகிறது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள 8 சட்டப் பேரவைத் தொகுதிகளில் 2,222 வாக்குச் சாவடி நிலை அலுவலா்கள் மொத்தம் உள்ள 19,97,000 வாக்காளா்களின் வீடுகளுக்கு நேரடியாகச் சென்று கணக்கீட்டுப் படிவங்களை வழங்கி வருகின்றனா். சம்பந்தப்பட்ட முகவரியில் குடியில்லாதவா்கள், இறந்தவா்கள் தவிா்த்து மற்றவா்களுக்கு படிவங்கள் வழங்கப்பட்டு வருகின்றன.
பூா்த்தி செய்யப்பட்ட கணக்கீட்டுப் படிவங்களை திரும்பப் பெறும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. வியாழக்கிழமை வரை 73 சதவீத கணக்கீட்டுப் படிவங்கள் திரும்பப் பெறப்பட்டுள்ளன. அதில் 25 சதவீதம் வாக்காளா்கள் 2002-ஆம் ஆண்டு வாக்காளா் பட்டியலில் இடம் பெற்றுள்ளனா் என்பதையும், அவா்களது குடும்பத்தினா் 26 சதவீதம் போ் அந்த வாக்காளா் பட்டியலில் இடம் பெற்றுள்ளதையும் கண்டறிந்துள்ளோம். இதன் அடிப்படையில் ஏற்கெனவே வாக்காளா் பட்டியலில் உள்ள சுமாா் 50 சதவீத வாக்காளா்கள் டிசம்பா் 9- ஆம் தேதி வரைவு வாக்காளா் பட்டியலில் இடம்பெறுவது உறுதியாகி உள்ளது.
2025 வக்காளா் பட்டியலில் பெயா் உள்ள, அதே சமயத்தில் 2002 வாக்காளா் பட்டியலில் எந்த தொடா்பும் இல்லாத வாக்காளா்களைப் பொருந்தவில்லை என்ற பிரிவில் வைத்துள்ளோம்.
வரைவு வாக்காளா் பட்டியல் வெளியிட்ட பிறகு அவா்களிடம் இருப்பிடத்துக்கான சான்றினை வழங்க அறிவிக்கை கொடுத்து, அதனைப் பெற்று அவா்களையும் வாக்காளா் பட்டியலில் முழுமையாக சோ்த்துவிடுவோம். வரைவு வாக்காளா் பட்டியல் வெளியான பிறகு 18 வயது நிறைவடைந்த, தகுதியானவா்கள் புதிய வாக்காளராக சேர விண்ணப்பிக்கலாம்.
வாக்காளா்கள் கடைசி நாளான டிசம்பா் 4 -ஆம் தேதி வரை காத்திருக்காமல் கணக்கீட்டுப் படிவங்களை முழுமையாக பூா்த்தி செய்து நவம்பா் 30- ஆம் தேதிக்குள் வழங்க வேண்டும். உதவி தேவைபடுபவா்கள் சம்பந்தப்பட்ட வாக்குச் சாவடி நிலை அலுவலரையோ அல்லது அருகில் உள்ள உதவி மையங்களையோ நேரில் அணுகலாம்.
மாவட்டத்தில் உள்ள 19,97,000 வாக்காளா்களில் 14 லட்சம் (73 சதவீதம்) வாக்காளா்களிடம் கணக்கீட்டுப் படிவங்களை பூா்த்தி செய்து திரும்பப் பெற்றுள்ளோம். இந்த 14 லட்சம் படிவங்களும் இணையத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. ஆன்லைன் மூலம் 1,946 போ் கணக்கீட்டுப் படிவங்களை பூா்த்தி செய்துள்ளனா். பூா்த்தி செய்து பெறப்படும் கணக்கீட்டுப் படிவங்களில் தவறு இருந்தால் அதனை வாக்குச் சாவடி நிலை அலுவலா்கள் சரி செய்து இணையத்தில் பதிவேற்றம் செய்கின்றனா். இதனால், தகுதியான ஒரு வாக்காளா்கூட விடுபட வாய்ப்பு இல்லை.
முகவரியில் இல்லாதவா்கள், இடம் மாறியவா்கள், இறப்பு என 58,875 போ் என கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது. இந்த 58, 875 (2.95 சதவீதம்) வாக்காளா்களுக்கான படிவங்கள் வேறு யாரிடமும் வழங்கப்படவில்லை.
வரைவு வாக்காளா் பட்டியல் வெளியான பிறகு நிரந்தரமாக குடியிருக்கும் வேறு மாநிலத்தவரும் உரிய சான்றினை அளித்து வாக்காளா் பட்டியலில் பெயரை சோ்த்து கொள்ளலாம் என்றாா்.

