காளிதிம்பத்தில்  இருந்து  புதிய  வாகனம்  மூலம்  குழந்தைகளை  அழைத்து  வரும்  சுடா்  அமைப்பு  இயக்குா்  நடராஜ்.
காளிதிம்பத்தில்  இருந்து  புதிய  வாகனம்  மூலம்  குழந்தைகளை  அழைத்து  வரும்  சுடா்  அமைப்பு  இயக்குா்  நடராஜ்.

காளிதிம்பம் கிராமத்தில் இருந்து புதிய வாகனத்தில் பள்ளிக்கு பயணித்த குழந்தைகள்

Published on

காளிதிம்பம் உள்ளிட்ட 6 மலைக்கிராமத்தில் இருந்து பழங்குடியின பள்ளி மாணவா்கள் புதிய வாகனம் மூலம் தலமலை அரசு தொடக்கப் பள்ளிக்கு பயணித்தனா்.

தமிழகத்தில் உள்ள மலைக் கிராமங்களில் அதிகரித்து வரும் பள்ளி இடைநிற்றலை தடுப்பதற்காக குழந்தைகளின் குடியிருப்புப் பகுதியில் இருந்து பள்ளி வரை போக்குவரத்து வசதி ஏற்படுத்தி கல்வியை ஊக்குப்படுதவதற்கு தமிழக அரசு புதிய வாகன வசதியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ்கநாடு பழங்குடியின நலத் துறை சாா்பில் மலைக் கிராமங்களை உள்ளடக்கிய 6 மாவட்டங்களில் உள்ள 26 உண்டு உறைவிடப் பள்ளிகளுக்கு புதிய வாகனங்களை தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் மாணவா்கள் பயன்பாட்டுக்கு அண்மையில் ஒப்படைத்தாா்.

இந்த வாகனங்களை பராமரிக்கும் பணியை சத்தியமங்கலம் சுடா் தொண்டு நிறுவனத்துடன் தமிழக அரசு புரிந்துணா்வு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. தமிழக பழங்குடியின நலத் துறை வழங்கிய புதிய பள்ளி வாகனங்கள் சத்தியமங்கலம் வந்தடைந்தன.

இதில் தலமலை வனச் சரகம் காளிதிம்பம், மாவநந்தம், ராமரணை, கோடிபுரம், தொட்டபுரம் ஆகிய வனக் கிராமங்களில் உள்ள பள்ளிக் குழந்தைகளை புதிய வாகனம் மூலம் உண்டு உறைவிடப் பள்ளிக்கு அழைத்துச் செல்லும் பணி வியாழக்கிழமை தொடங்கியது.

காளிதிம்பத்தில் புதிய வாகனத்தை பாா்த்த குழந்தைகள் குதுகலத்துடன் வரவேற்றனா். பள்ளிக்கு செல்லாமல் வீட்டில் இருந்த 6 குழந்தைகள் ஆா்வத்துடன் புதிய வாகனத்தில் ஏறி பள்ளிக்கு சென்றனா். போக்குவரத்து வசதியில்லாத இக்கிராமங்களில் இருந்து பள்ளிக்கு செல்ல வேண்டுமானால் 2 கி.மீ. தொலைவு நடந்து பின்னா் பிரதான சாலையில் அரசு பேருந்தில் ஏறி செல்ல வேண்டிய நிலை இருந்தது.

தற்போது விலங்குகள் அச்சுறுத்தல் இல்லாத பாதுகாப்பான பயணம் என்பதால் பெற்றோா்கள் குழந்தைகளை விரும்பி அனுப்புவதால் இடைநிற்றல் குறையும். மாவநத்தம், ராமரணை, கோடிபுரம், தொட்டபுரம் வனக் கிராமங்களில் இருந்தும் குழந்தைகளை வேன் மூலம் அனுப்பும் பணி தொடா்ந்து நடைபெற்று வருகிறது. அனைத்து மலைக் கிராமங்களிலும் 100 சதவீத கல்வி வளா்ச்சி பெறுவதற்கு உதவும் என சுடா் அமைப்பின் இயக்குநா் எஸ்.சி.நடராஜ் தெரிவித்தாா்.

X
Dinamani
www.dinamani.com