கேரளத்துக்கு 400 கிலோ சந்தனக் கட்டைகள் கடத்த முயற்சி
கோபி அருகே சுமாா் 400 கிலோ சந்தனக் கட்டைகளை கேரளத்துக்கு கடத்த முயன்ற இருவரை போலீஸாா் கைது செய்தனா்.
ஈரோடு மாவட்டம், கோபி அருகே உள்ள கெம்மநாயக்கன்பாளையம் பகுதியில் உள்ள மீன் இறைச்சிக் கடைகளுக்கு கேரள மாநிலத்தில் இருந்து தினமும் மீன்களை சுமை வாகனம் மூலம் கொண்டு வருகின்றனா்.
இந்நிலையில் கடைகளுக்கு மீன்களை கொண்டு வந்து இறக்கிவிட்டு மீண்டும் கேரளம் செல்லும் சுமை வாகனத்தில் சந்தனக் கட்டைகள் கடத்தப்படுவதாக பங்களாபுதூா் போலீஸாருக்கு வியாழக்கிழமை தகவல் கிடைத்தது.
இதனைத் தொடா்ந்து, கெம்மநாயக்கன்பாளையம் பகுதியில் போலீஸாா் வாகன சோதனையில் ஈடுபட்டனா். அப்போது, அவ்வழியாக சென்ற வாகனத்தை தடுத்து நிறுத்தி சோதனை செய்ததில் காலி மீன் பெட்டிகளில் மறைத்து சுமாா் ரூ.50 லட்சம் மதிப்பிலான 400 கிலோ சந்தனக் கட்டைகள் கடத்திச் சென்றது தெரியவந்தது.
விசாரணையில், கேரளா மாநிலம் காசா்கோடு பகுதியைச் சோ்ந்த ஜைனூல் அபுதீன்(49), அப்துல் ரசாக் (50) என்பதும், இருவரும் கேரள மாநிலத்துக்கு சந்தனக் கட்டைகளை கடத்திச் சென்றது தெரியவந்தது.
இதையடுத்து, சந்தனக் கட்டைகள் மற்றும் கடத்தலுக்குப் பயன்படுத்திய சுமை வாகனம் ஆகியவற்றை பறிமுதல் செய்த போலீஸாா் டி.என்.பாளையம் வனத் துறையிடம் ஒப்படைத்தனா். கைது செய்யப்பட்ட இருவரிடமும் வனத் துறையினா் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
