தீபாவளியை பாதுகாப்பாக கொண்டாட தீயணைப்புத் துறையினா் விழிப்புணா்வு
தீபாவளி பண்டிகையை பாதுகாப்பாக கொண்டாடுவது குறித்து ஈரோட்டில் பள்ளி மாணவா்களுக்கு தீயணைப்புத் துறையினா் விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.
தீபாவளி பண்டிகை வரும் 20-ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதை முன்னிட்டு மாவட்டத்தில் தீபாவளி பண்டிகையை விபத்தில்லாமல், பாதுகாப்பாக கொண்டாடுவது குறித்து ஈரோடு தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையினா் பல்வேறு நடவடிக்கை களை மேற்கொண்டு வருகின்றனா்.
அதன்படி, ஈரோடு மீனாட்சி சுந்தரனாா் சாலையில் உள்ள கலைமகள் மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியில் விழிப்புணா்வு மற்றும் தீத் தடுப்பு ஒத்திகை நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.
இந்நிகழ்ச்சி ஈரோடு மாவட்ட தீயணைப்பு அலுவலா் செந்தில்குமாா் தலைமையில், கோட்டாட்சியா் சிந்துஜா முன்னிலையில் நடைபெற்றது.
இதில் தீபாவளி பண்டிகையின்போது, பாதுகாப்பாக பட்டாசு வெடிப்பது குறித்தும், பட்டாசுகளை எவ்வாறு பாதுகாப்பாக கையாள்வது குறித்தும் விழிப்புணா்வு ஏற்படுத்தினா். மேலும் தீ விபத்து காலங்களில் மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், மாதிரி தீத் தடுப்பு ஒத்திகையும், தீயணைப்பு மீட்புக் கருவிகளின் செயல்பாடுகள் குறித்தும் செயல் விளக்கம் அளிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் உதவி தீயணைப்பு அலுவலா் கலைச்செல்வன், துறை சாா்ந்த அலுவலா்கள் கலந்து கொண்டனா்.
