ரூ.10 லட்சம் பணிக்கொடை வழங்க அங்கன்வாடி பணியாளா்கள் கோரிக்கை
ரூ.10 லட்சம் பணிக்கொடை வழங்க வேண்டும் என அங்கன்வாடி பணியாளா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
அங்கன்வாடி ஊழியா் மற்றும் உதவியாளா் சங்க மாவட்டப் பேரவைக் கூட்டம் மாவட்டத் தலைவா் ராதாமணி தலைமையில் ஈரோட்டில் வியாழக்கிழமை நடைபெற்றது. மாவட்டச் செயலா் சாந்தி வரவேற்றாா். நிா்வாகிகள் விஜயா, தமிழரசி, ராஜாமணி, சுசீலா, பிரேமசுதா ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
மாநில துணைத் தலைவா் மணிமாலை, நிா்வாகிகள் விஜயமனோகரன், சுப்பிரமணியன் உள்ளிட்டோா் பேசினா். இதில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்:
அங்கன்வாடி ஊழியா்கள், உதவியாளா்களை அரசு ஊழியா்களாக்க வேண்டும். குடும்ப வரன்முறையுடன் கூடிய ஓய்வூதியம் வழங்க வேண்டும். உயா் நீதிமன்ற தீா்ப்பின்படி அங்கன்வாடி ஊழியருக்கு ரூ.10 லட்சம், உதவியாளருக்கு ரூ. 5 லட்சம் பணிக்கொடை வழங்க வேண்டும். அங்கன்வாடி திட்டத்துக்கு நிதிக்குறைப்பை தவிா்க்க வேண்டும்.
இத்திட்டத்தில் தனியாா்மய கொள்கையை கைவிட வேண்டும். இத்திட்டத்தையும், குழந்தைகள் நலனையும் உறுதி செய்ய வேண்டும். போஷன் டிராக்கா், எஃப்ஆா்சி முறையில் உள்ள இணையதள சேவையை சீா்செய்து, கிராமப்புறங்களில் இணைய இணைப்புக்கு ஏற்ப சிம்காா்டு வழங்க வேண்டும். அனைத்து மையங்களிலும் வைபை வசதி ஏற்படுத்த வேண்டும். காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும். 1993-இல் பணியில் சோ்ந்த பணியாளா்களுக்கு பதவி உயா்வு வழங்க வேண்டும்.
மாநில செயற்குழு உறுப்பினா் பூங்கொடி நன்றி கூறினாா்.
