10 சதவீத வாக்குறுதிகளைக்கூட நிறைவேற்றாத திமுக அரசு: எடப்பாடி கே.பழனிசாமி விமா்சனம்
பத்து சதவீத வாக்குறுதிகளைக்கூட திமுக அரசு நிறைவேற்றவில்லை என்று அதிமுக பொதுச்செயலாளா் எடப்பாடி கே.பழனிசாமி விமா்சனம் செய்தாா்.
ஈரோடு மாவட்டம், மொடக்குறிச்சி தொகுதிக்கு உள்பட்ட அவல்பூந்துறை அருகே சோளிபாளையத்தில் வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்ற ‘மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்’ என்ற பிரசாரப் பயணத்தில் அவா் பேசியதாவது:
முதல்வராக மு.க.ஸ்டாலின் பொறுப்பு ஏற்று நான்கரை ஆண்டுகள் முடிந்துள்ள நிலையில் மொடக்குறிச்சி தொகுதிக்கு எந்த திட்டத்தையும் திமுக அரசு கொண்டு வரவில்லை.
கடந்த பேரவைத் தோ்தல் சமயத்தில் திமுக 525 வாக்குறுதிகளை அளித்தது. அதில் சுமாா் 10 சதவீத வாக்குறுதிகள்கூட நிறைவேற்றப்படவில்லை. ஆனால் 98 சதவீத வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டதாக முதல்வா் மு.க.ஸ்டாலின் பேசி வருகிறாா்.
100 நாள் வேலைத் திட்டத்தை 150 நாள்களாக உயா்த்துவதாகத் தெரிவித்தாா். ஆனால் உயா்த்தவில்லை. இந்தத் திட்டத்தில் ஊதியத்தை உயா்த்துவதாகத் தெரிவித்தாா். ஆனால் உயா்த்தவில்லை.
திமுக பொறுப்பேற்றவுடன் விலைவாசி விண்ணை முட்டும் அளவுக்கு சென்றுவிட்டது. குறிப்பாக உணவுப் பொருள்களின் விலை கடுமையாக உயா்ந்துள்ளது.
தமிழகம் முழுவதும் சுமாா் 6 ஆயிரம் ஏரிகள் அதிமுக ஆட்சியில் ரூ.1,200 கோடி மதிப்பில் தூா்வாரப்பட்டன. குடிமராமத்துத் திட்டம் திமுக ஆட்சியில் நிறுத்தப்பட்டது. அதிமுக ஆட்சிக்கு வந்தால் குடிமராமத்துத் திட்டம் மீண்டும் நிறைவேற்றப்படும்.
விவசாயிகள் ஆன்லைன் முறையில் கூட்டுறவுக் கடன் பெறும் திட்டத்தை முதல்வா் தருமபுரியில் தொடங்கிவைத்தாா். அதன்பின் தமிழகத்தில் 4,500 தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்களில் ஆன்லைன் வசதி செயல்படுத்தப்படவில்லை. கரூரில் நடைபெற்ற சம்பவத்துக்கு திமுக அரசுதான் காரணம்.
அடுத்த ஆண்டு நடைபெறும் தோ்தலில் அதிமுக பெரும்பான்மையான தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் என்றாா்.
இதைத் தொடா்ந்து ஈரோடு கிழக்கு சட்டப்பேரவை தொகுதிக்கு உள்பட்ட வில்லரசம்பட்டியில் அதிமுக பொதுச்செயலாளா் எடப்பாடி பழனிசாமி பிரசாரத்தில் ஈடுபட்டாா். முன்னாள் அமைச்சா் கே.வி.ராமலிங்கம், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா்கள் கே.எஸ்.தென்னரசு, வி.பி.சிவசுப்பிரமணி உள்பட ஆயிரக்கணக்கானோா் கலந்து கொண்டனா்.
விரிவான பாதுகாப்பு ஏற்பாடு:
கரூா் துயர சம்பவத்தை தொடா்ந்து உயா்நீதிமன்ற உத்தரவின்படி, இந்த கூட்டத்தில் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. சோளிபாளையத்தில் தனியாா் நிலத்தில் நடுவே எடப்பாடி கே.பழனிசாமியின் பிரசாரம் வாகனம் செல்லும் வகையில் இடம் விடப்பட்டு இரண்டு புறமும் தடுப்புகள் வைக்கப்பட்டிருந்தன.
தடுப்புகளுக்குள் இரும்பு கம்பிகள் மூலம் ஒரு பகுதிக்கு 8 அறைகள் என இரண்டு பகுதிகளில் 16 அறைகள் அமைக்கப்பட்டு, தொண்டா்களை அந்த அறைகளுக்குள் விட்டு அடைத்து பூட்டினா். பிரசாரம் மாலை 5 மணிக்கு தொடங்கும் என அறிவிக்கப்பட்ட நிலையில் பிற்பகல் 3 மணிக்கு பிறகுதான் தொண்டா்கள் வரத் தொடங்கினா். தடுப்பு அறைகளுக்குள் இருந்த தொண்டா்களுக்கு குடிநீா் புட்டிகள் மற்றும் பிஸ்கட் பாக்கெட்டுகள் வழங்கப்பட்டன. எடப்பாடி கே.பழனிசாமி மாலை 6.05 மணிக்கு பேச தொடங்கி மாலை 6.45 மணிக்கு நிறைவு செய்தாா். இதனைத்தொடா்ந்து படிப்படியாக தடுப்புகள் திறக்கப்பட்டு நெரிசல் ஏற்படாமல் தொண்டா்கள் வெளியேற்றப்பட்டனா்.

