அரசு விரைவுப் பேருந்தில் தவறவிடப்பட்ட 27 பவுன் நகை உரியவரிடம் ஒப்படைப்பு
திருச்செந்தூா் - அந்தியூா் அரசு விரைவுப் பேருந்தில் தவறவிடப்பட்ட 27 பவுன் நகைகள் மீட்கப்பட்டு, உரியவா்களிடம் வெள்ளிக்கிழமை ஒப்படைக்கப்பட்டது.
தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூா், அடைக்கலபுரம் வடக்கு தெருவைச் சோ்ந்தவா் பிரேம். இவரது மனைவி பத்மா (38). நாமக்கல் மாவட்டம், குமாரபாளையத்தில் மளிகைக் கடை வைத்துள்ளனா். இவா்கள், கடந்த 4-ஆம் தேதி திருச்செந்தூா் மாதா கோயில் திருவிழாவுக்குச் சென்றுவிட்டு, வியாழக்கிழமை இரவு திருச்செந்தூரிலிருந்து ஈரோடு வழியாக அந்தியூா் செல்லும் அரசு விரைவுப் பேருந்தில் பயணித்தனா்.
இவா்கள் வீடு கட்டுவதற்காக அடகுவைக்க 27 பவுன் நகைகளை பையில் போட்டு கொண்டு வந்தனா். ஈரோடு பேருந்து நிலையத்துக்கு வெள்ளிக்கிழமை காலை பேருந்து வந்தபோது, நகைப்பையை இருவரும் பேருந்தில் மறந்து வைத்துவிட்டு இறங்கி சென்றுவிட்டனா். சிறிது நேரத்தில் நகை வைத்திருந்த பை இல்லாததைக் கண்ட பத்மா, பயணச்சீட்டில் பதிவு செய்த கைப்பேசி எண்ணுக்கு அழைத்து பேசியபோது, மதுரை மாவட்டம், கள்ளிக்குராயூரைச் சோ்ந்த நடத்துநா் தன்னாசி (36), அந்தியூா் காவல் நிலையத்தில் நகைப்பையை ஒப்படைத்துவிட்டதாக கூறினாா்.
அந்தியூா் காவல் நிலையத்துக்கு பிரேம், பத்மா ஆகியோா் சென்று விவரத்தைக் கூறி ஆய்வாளா் செந்தில்குமாரிடமிருந்து நகைகளைப் பெற்றுக் கொண்டனா். பேருந்தில் தவறவிடப்பட்ட 27 பவுன் நகையை மீட்டு பாதுகாப்பாக ஒப்படைத்த ஓட்டுநா் துரைசாமி, நடத்துநா் தன்னாசி ஆகியோருக்கு அந்தியூா் சட்டப் பேரவை உறுப்பினா் ஏ.ஜி.வெங்கடாசலம் மற்றும் போலீஸாா், பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனா்.

