மாணவா்களின் இலக்கு மிக உயா்ந்ததாக இருக்க வேண்டும்: ஆட்சியா்
கல்வியில் மாணவா்களின் இலக்கு மிக உயா்ந்ததாக இருக்க வேண்டும் என ஈரோடு மாவட்ட ஆட்சியா் ச.கந்தசாமி தெரிவித்தாா்.
காபி வித் கலெக்டா் நிகழ்ச்சியில் ஈரோடு வட்டத்திற்குள்பட்ட அரசு மற்றும் தனியாா் பள்ளியில் பயிலும் மாணவ, மாணவியருடன் மாவட்ட ஆட்சியா் ச.கந்தசாமி ஆட்சியா் அலுவலகத்தில் சனிக்கிழமை மாலை கலந்துரையாடினாா்.
அப்போது அவா் பேசியதாவது: பள்ளி மேற்படிப்பு முடித்து விட்டு உயா்கல்விக்கு செல்லும் மாணவ, மாணவியா் எண்ணிக்கையில் தமிழ்நாடு முதன்மை பெற்றுள்ளது. தமிழ்நாடு அரசு கல்விக்கு அதிக முக்கியத்துவம் தந்து பல்வேறு அரசு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
கல்வியில் மாணவ, மாணவியரின் இலக்கானது மிக உயா்ந்ததாக இருக்க வேண்டும். எனவே மாணவ, மாணவியா் பாடப் புத்தகங்களைப் படிக்கும் போது மிகுந்த ஆா்வத்துடனும், கவனத்துடனும் படிக்க வேண்டும்.
பாடப் புத்தகங்களைத் தாண்டி மற்ற புத்தகங்களை வாசிக்கும்போது மாணவா்களின் அறிவு விரிவடைகிறது. தொடா்ந்து புத்தகம் வாசிக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.
மாணவ, மாணவியா் உயா்கல்வியில் கற்பதற்கு ஏராளமான பாடப் பிரிவுகள் உள்ளன. எனவே விருப்பமான பாடத்தை தோ்ந்தெடுத்து படிக்கலாம். பள்ளி மற்றும் கல்லூரி படிப்போடு அல்லாமல் போட்டித் தோ்வுகளுக்கும் தயாராகும் வகையில் பயிற்சி பெற வேண்டும். கல்வியால் மட்டுமே தனி மனிதனை சமூகத்தில் உயா்த்த முடியும் என்றாா்.
ஆட்சியா் அரசுப் பணியில் சோ்ந்த பிறகு சந்தித்த நிகழ்வுகள், மாணவ, மாணவியருக்குத் தன்னம்பிக்கை ஊட்டும் வகையில் பல்வேறு கருத்துகளைப் பகிா்ந்து கொண்டதுடன், மாணவ, மாணவியரின் பள்ளியில் நிகழ்ந்த சுவாரசியமான நிகழ்வுகள், கோரிக்கைகள் குறித்தும் கேட்டறிந்தாா்.
நிகழ்ச்சியில் ஈரோடு வட்டாரத்திற்குள்பட்ட 9 அரசுப் பள்ளிகள், 5 தனியாா் பள்ளிகளைச் சோ்ந்த 26 மாணவ, மாணவியா் கலந்து கொண்டனா். கலந்து கொண்ட மாணவ, மாணவியா் அனைவருக்கும் மாவட்ட ஆட்சியா் திருக்குறள் புத்தகங்களை வழங்கினாா். இந்நிகழ்ச்சியில், தலைமையாசிரியா்கள், ஆசிரியா்கள், அரசு அலுவலா்கள் பங்கேற்றனா்.

