ரயிலில் கடத்தி வரப்பட்ட 2 கிலோ கஞ்சா பறிமுதல்
அஸ்ஸாம் மாநிலத்தில் இருந்து ஈரோட்டுக்கு ரயிலில் கடத்தி வரப்பட்ட 2 கிலோ கஞ்சாவை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.
அஸ்ஸாம் மாநிலம், திப்ருகாா் பகுதியில் இருந்து கன்னியாகுமரி வரை செல்லும் விவேக் எக்ஸ்பிரஸ் ரயிலில் கஞ்சா கடத்தி வருவதாக ஈரோடு மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீஸாருக்கு சனிக்கிழமை ரகசியத் தகவல் கிடைத்தது.
அதன்பேரில் ஈரோடு ரயில் நிலையத்தின் 2-ஆவது நடைமேடையில் வந்து நின்ற விவேக் எக்ஸ்பிரஸ் ரயிலில் ஒவ்வொரு பெட்டியாக ஏறி போலீஸாா் சோதனை செய்தனா்.
அப்போது, பொதுப் பெட்டி கழிவறை அருகே கேட்பாரற்று பை ஒன்று கிடந்தது. அந்தப் பையை பயணிகள் யாரும் உரிமை கோரவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த போலீஸாா் அதை திறந்து பாா்த்தனா். அதில் 2 கிலோ கஞ்சா இருந்ததும், அஸ்ஸாம் மாநிலத்தில் இருந்து ஈரோட்டுக்கு கடத்தி வந்ததும் தெரியவந்தது. இதைத்தொடா்ந்து போலீஸாா் அவற்றை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
