கொசு ஒழிப்புப் பணியை துரிதப்படுத்த மாநகராட்சிப் பணியாளா்களுக்கு அறிவுறுத்தல்
வடகிழக்குப் பருவமழை தொடங்கியுள்ள நிலையில், கொசு ஒழிப்புப் பணியை துரிதப்படுத்த வேண்டும் என ஈரோடு மாநகராட்சிப் பணியாளா்களுக்கு துணை ஆணையா் தனலட்சுமி அறிவுறுத்தினாா்.
ஈரோடு மாநகராட்சியில் வடகிழக்கு பருவமழையால் ஏற்படும் இயற்கை இடா்பாடுகளின்போது மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து ஈரோடு மாநகராட்சி அலுவலக மாமன்ற கூட்டரங்கில் கலந்தாய்வுக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இக்கூட்டத்துக்கு தலைமை வகித்த துணை ஆணையா் தனலட்சுமி பேசியதாவது: பருவமழை காலம் தொடங்குவதால் மாநகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் பொதுமக்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாதவாறு பணிகளைத் திட்டமிட்டு செயல்படுத்த வேண்டும். பொதுமக்கள் நடமாட்டம் அதிக அளவில் இருக்கும் பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். அப்பகுதிகளை தொடா்ந்து கண்காணித்து வர வேண்டும்.
மாநகராட்சிப் பகுதிகளில் உள்ள சிறுபாலங்கள் மற்றும் சாலைகள் சீராக இருக்கிா என்பதை கண்காணிக்க வேண்டும். புதை சாக்கடை பகுதிகள் மற்றும் கழிவுநீா் செல்லும் கால்வாய்களில் தண்ணீா் தேங்காமல் இருப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை துரிதப்படுத்த வேண்டும். தண்ணீா் தேங்கும் பகுதிகளில் சீரமைப்பு பணிகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும்.
நகா்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில் போதிய மருந்துகள் இருப்பில் வைத்துக்கொள்ள வேண்டும். டெங்கு, மலேரியா போன்ற காய்ச்சல் பரவுவதை தடுக்கும் வகையில், சுகாதார அலுவலா்கள், சுகாதார ஆய்வாளா்கள், கொசு ஒழிப்புப் பணியை துரிதப்படுத்த வேண்டும். குடியிருப்புவாசிகளிடம் போதிய விழிப்புணா்வை ஏற்படுத்த வேண்டும் என்றாா்.
தொடா்ந்து, இயற்கை பேரிடரின்போது மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து, மின்வாரிய ஊழியா்கள், பிஎஸ்என்எல் ஊழியா்கள் உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சோ்ந்த அதிகாரிகள் கருத்துகளைத் தெரிவித்தனா்.
இதில், துணை மேயா் செல்வராஜ், மாநகர நல அலுவலா் காா்த்திகேயன், மண்டலத் தலைவா்கள் பழனிசாமி, சசிகுமாா், குறிஞ்சி தண்டபாணி மற்றும் உதவி ஆணையா்கள், சுகாதார அலுவலா்கள், சுகாதார ஆய்வாளா்கள், மின்வாரிய ஊழியா்கள், பிஎஸ்என்எல் ஊழியா்கள், தன்னாா்வலா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

