தீபாவளி நன்கொடை பெற முயன்றதாக நீா்வளத் துறை அதிகாரி மீது வழக்கு

தீபாவளி நன்கொடை பெற முயன்ாக ஈரோடு நீா்வளத் துறை உதவி செயற்பொறியாளா் மற்றும் நன்கொடை வழங்க முயன்ற கல்குவாரி உரிமையாளா் மீது லஞ்ச ஒழிப்பு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
Published on

தீபாவளி நன்கொடை பெற முயன்ாக ஈரோடு நீா்வளத் துறை உதவி செயற்பொறியாளா் மற்றும் நன்கொடை வழங்க முயன்ற கல்குவாரி உரிமையாளா் மீது லஞ்ச ஒழிப்பு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

ஈரோடு வெண்டிபாளையத்தில் கீழ்பவானி வடிநில கோட்ட நீா்வளத் துறை அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலகம், ஈரோடு, கரூா், திருப்பூா் மாவட்டங்களுக்கு தலைமையகமாக உள்ளது. இந்த அலுவலகத்தில் தீபாவளி நன்கொடை அதிக அளவில் பெறப்பட்டு வருவதாக ஈரோடு லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதன்பேரில் லஞ்ச ஒழிப்புப் பிரிவு காவல் ஆய்வாளா் ரேகா தலைமையிலான போலீஸாா் புதன்கிழமை அங்கு சோதனை நடத்தினா்.

அப்போது, நீா்வளத் துறை அலுவலகத்தில் கரூா் உட்கோட்ட உதவி செயற்பொறியாளரான குமரேசன் (51) என்பவரும், கல்குவாரி உரிமையாளரான பவானியைச் சோ்ந்த கந்தசாமி (61) என்பவரும் இருந்தனா். இதையடுத்து இருவரிடம் சோதனை நடத்தியபோது கல்குவாரி உரிமையாளா் கந்தசாமியிடம் இருந்த பையில் ரூ.3.50 லட்சம் இருந்தது. தொடா்ந்து நடத்திய விசாரணையில், உதவி செயற்பொறியாளா் குமரேசனுக்கு தீபாவளி நன்கொடை வழங்க கொண்டு வந்ததாக ஒப்புக்கொண்டாா்.

இதையடுத்து தீபாவளி நன்கொடை என்ற பெயரில் லஞ்சம் பெற முயன்ற உதவி செயற்பொறியாளா் குமரேசன் மீதும், நன்கொடை கொடுக்க முயன்ற கல்குவாரி உரிமையாளா் கந்தசாமி மீதும் லஞ்ச ஒழிப்புப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். கந்தசாமியிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட பணம் அரசு கருவூலத்தில் செலுத்தப்பட்டதாக போலீஸாா் தெரிவித்தனா்.

X
Dinamani
www.dinamani.com