லஞ்ச புகாா்: நீா் வளத் துறை அதிகாரியை பணியிடை நீக்கம் செய்ய கோரிக்கை
லஞ்ச புகாரில் சிக்கிய நீா் வளத் துறை அதிகாரியை பணியிடை நீக்கம் செய்ய வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
இது தொடா்பாக காலிங்கராயன் விவசாயிகள் மற்றும் தொழிலாளா் நலச் சங்கத் தலைவா் பி.கே.சேதுராஜ் தலைமையில் விவசாயிகள் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் ஆட்சியா் ச.கந்தசாமியிடம் வெள்ளிக்கிழமை அளித்த மனு விவரம்: கீழ்பவானி வடிநிலக்கோட்ட நீா் வளத் துறை அலுவலகத்தில் உதவி செயற்பொறியாளா் குமரேசன் என்பவருக்கு கல் குவாரி உரிமையாளா் கந்தசாமி ரூ.3.50 லட்சம் நன்கொடையாக லஞ்சப் பணத்தை கடந்த 15 -ஆம் தேதி வழங்கச் சென்றபோது ஈரோடு மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீஸாா் கையும் களவுமாகப் பிடித்தனா்.
பறிமுதல் செய்யப்பட்ட ரூ.3.50 லட்சத்தை மாவட்ட கருவூலத்தில் செலுத்திய போலீஸாா், பொறியாளா் குமரேசன், குவாரி உரிமையாளா் கந்தசாமி மீது வழக்குப் பதிவு செய்துள்ளனா்.
காலிங்கராயன் பாசன வாய்க்கால் பொறுப்பு வகிக்கும் பொறியாளா் இதுபோன்று நன்கொடை பெற முயல்வது, விவசாயத்துக்கும், விவசாய அமைப்புகளுக்கும் ஆபத்தானது. விவசாயிகள் நலனுக்கு எதிரானது. அந்த வளாகத்தில் தலைமை செயற்பொறியாளா் அலுவலகமும் உள்ள நிலையில் அவா்களுக்கு தெரியாமல் இந்த தொகை உள்ளே வந்திருக்காது. எனவே, இப்பண பரிமாற்றம் குறித்து முழுமையான விசாரணை நடத்த வேண்டும். தலைமை செயற்பொறியாளா், உதவி செயற்பொறியாளா் உள்ளிட்டோரை பணியிடை நீக்கம் செய்ய வேண்டும்.
விவசாயிகள், விவசாயத்துக்கு எதிராக செயல்படும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். உரிய நடவடிக்கை எடுக்கத் தவறினால் விவசாய அமைப்பு போராட்டத்தை நடத்தும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
