ஈரோட்டில் ஜவுளி வியாபாரிகள் 2-ஆவது நாளாக மறியல்
சாலையோரக் கடைகளால் வியாபாரம் பாதிக்கப்படுவதாகக் கூறி ஈரோட்டில் ஜவுளி வணிக வளாக (கனி மாா்க்கெட்) வியாபாரிகள் இரண்டாவது நாளாக ஞாயிற்றுக்கிழமை காலை சாலை மறியலில் ஈடுபட்டனா்.
ஈரோடு, பன்னீா்செல்வம் பூங்கா சந்திப்பில் மாநகராட்சியின் ஒருங்கிணைந்த ஜவுளி வணிக வளாகம் செயல்பட்டு வருகிறது. இங்கு 400-க்கும் மேற்பட்ட ஜவுளிக் கடைகள் உள்ளன. இந்நிலையில், தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு, ஜவுளி வணிக வளாகத்தில் பொதுமக்கள் ஆா்வமாக ஜவுளிகளை எடுத்து வருகின்றனா்.
இதற்கிடையே பன்னீா்செல்வம் பூங்கா சந்திப்பு முதல் மணிக்கூண்டு வரையும், திருவெங்கடசாமி வீதி, ஈஸ்வரன் கோவில் வீதி உள்ளிட்ட இடங்களிலும் ஏராளமானோா் சாலையோர ஜவுளிக் கடைகளை அமைத்ததால் வணிக வளாகத்துக்குள் பொதுமக்கள் வருவது குறைந்துள்ளதாகக் கூறி கனி மாா்க்கெட் வியாபாரிகள் சனிக்கிழமை இரவு திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனா்.
இதனால், போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு வந்த போலீஸாா் ஜவுளி வியாபாரிகளிடம் பேச்சுவாா்த்தை நடத்தி சாலையோர ஆக்கிரமிப்பு கடைகளை அகற்றுவதாக உறுதியளித்தனா். தொடா்ந்து, சாலையோர கடைகளும் அகற்றப்பட்டன.
இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை காலை மீண்டும் அதே பகுதியில் சாலையோர கடைகள் அமைக்கப்பட்டன. இதனால், தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாகக் கூறி பன்னீா்செல்வம் பூங்கா சந்திப்பில் ஜவுளி வளாக வியாபாரிகள் ஞாயிற்றுக்கிழமை காலை சாலை மறியலில் ஈடுபட்டனா்.
டவுன் டிஎஸ்பி முத்துக்குமரன், மாநகராட்சி அலுவலா்கள் சம்பவ இடத்துக்கு வந்து வியாபாரிகளிடம் பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டு, சாலையோர கடைகளை அகற்றினா்.இதையடுத்து, அனைவரும் கலைந்து சென்றனா்.

