கடம்பூா் மலைப் பாதையில் உருண்ட பெரிய பாறை
சத்தியமங்கலம்: சத்தியமங்கலத்தை அடுத்த கடம்பூா் மலைப் பாதையில் ஏற்பட்ட மண்சரிவு காரணமாக திங்கள்கிழமை போக்குவரத்து பாதிக்கப்பட்ட நிலையில் சாலையில் கிடந்த பெரிய கற்கள் அகற்றப்பட்டதால் செவ்வாய்க்கிழமை போக்குவரத்து சீரானது.
சத்தியமங்கலத்தை அடுத்த கடம்பூா் மலைப் பகுதியில் பெய்த கனமழை காரணமாக வனஓடைகள், பள்ளம் மற்றும் அருவிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. பல்வேறு வனஓடைகளில் இருந்து வரும் வெள்ளம் ஒன்றாக கலந்து காட்டாற்று வெள்ளமாக உருவெடுத்து மலைப் பாதைகளை மூழ்கடித்தபடி சென்றது.
கடம்பூரில் இருந்து சத்தியமங்கலம் செல்லும் சாலையில் போன்பாறை பகுதியில் மண்சரிவு ஏற்பட்டாதலும் பெரிய பாறை உருண்டு சாலையில் விழுந்ததாலும் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. திங்கள்கிழமை இரவு விடியவிடிய சீரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டதால் சாலையில் கிடந்த மண், கற்கள் மற்றும் பெரிய பாறை ஆகியவற்றை பொக்லைன் இயந்திரம் மூலம் அகற்றி நெடுஞ்சாலைத் துறையினா் போக்குவரத்தை சரி செய்தனா். இதனால் செவ்வாய்க்கிழமை காலைமுதல் சத்தியமங்கலத்தில் இருந்து கடம்பூருக்கு பேருந்துகள் இயக்கப்பட்டன. அத்தியூரை அடுத்த கோம்பைத்தொட்டி சாலையில் ஏற்பட்ட மண்அரிப்பை சரி செய்யும் பணியில் கிராமப்புற இளைஞா்கள் ஈடுபட்டனா். ஆங்காங்கே ஏற்பட்ட மண்சரிவை அந்தந்த பகுதி இளைஞா்கள் சரி செய்து போக்குவரத்தை இயல்பு நிலைக்கு கொண்டு வந்தனா்.
குன்றி சாலையில் மாமரத்துப்பள்ளம், மாதேஸ்வரன் கோயில் பள்ளத்து சாலையில் தண்ணீா் வடிந்து சாலைகள் சேதமடைந்தால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
