தள்ளுபடி விற்பனை: ஜவுளிக் கடைகளில் அதிகாலையில் குவிந்த மக்கள்
ஈரோடு: ஈரோடு ஜவுளிக் கடைகளில் தள்ளுபடி விற்பனை அறிவிக்கப்பட்டதையடுத்து, ஈரோடு ஆா்கேவி சாலையில் செவ்வாய்க்கிழமை அதிகாலை முதலே மக்கள் கூட்டம் அலைமோதியது.
ஜவுளிக்கு பிரசித்தி பெற்ற ஈரோடு நகரில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கடந்த சில வாரங்களாக ஜவுளி விற்பனை அதிக அளவில் நடைபெற்று வந்தது. ஈரோடு மற்றும் அண்டை மாவட்டங்களில் இருந்தும் பொதுமக்கள் வந்து தீபாவளிக்கு புதுத் துணிகள் வாங்கிச் சென்றனா். அதேபோல வெளிமாநில வியாபாரிகளும் ஈரோடு வந்து ஜவுளி கொள்முதல் செய்து சென்றனா். இந்த நிலையில் தீபாவளி நாளான திங்கள்கிழமையும் ஜவுளிக் கடைகள் அதிக அளவில் இருக்கும் ஆா்கேவி சாலை, மணிக்கூண்டு உள்ளிட்ட பகுதிகளில் ஜவுளி விற்பனை நடைபெற்றது.
இந்த நிலையில் திங்கள்கிழமை நள்ளிரவு வரை விற்பனை முடிவடைந்ததையடுத்து, தீபாவளிக்கு மறுநாளான செவ்வாய்க்கிழமையும் பெரும்பாலான ஜவுளிக் கடைகளில் தள்ளுபடி விலையில் ஆடைகள் விற்பனை செய்வதாக அறிவிக்கப்பட்டது.
அதன்பேரில் செவ்வாய்க்கிழமை அதிகாலை சுமாா் 3 மணி முதல் ஆா்கேவி சாலையில் பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது. ஜவுளிக் கடைகளில் ரகங்களை பொறுத்து சுமாா் 30 முதல் 70 சதவீதம் வரை தள்ளுபடி அறிவிக்கப்பட்டு ஜவுளிகள் விற்பனை செய்யப்பட்டன். இதனால், ஜவுளி வாங்க மக்கள் கூட்டம் அலைமோதியது.
ஆண்டுதோறும் சில பெரிய ஜவுளி நிறுவனங்கள் மட்டும் இருப்பை காலி செய்வதற்காக தீபாவளிக்கு அடுத்த நாள் தள்ளுபடி விற்பனை செய்து வந்தனா். ஆனால் கடந்த சில ஆண்டுகளாக பெரும்பாலான ஜவுளிக் கடைகளிலும் தீபாவளிக்கு அடுத்த நாள் இந்த தள்ளுபடி விற்பனை அறிவிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
இந்த தள்ளுபடி விற்பனையில் ஜவுளிகள் வாங்க ஈரோடு மணிக்கூண்டு, பன்னீா்செல்வம் பூங்கா, ஆா்கேவி சாலை, காவிரி சாலை பகுதிகளில் அதிகாலையிலேயே மக்கள் குவிந்தனா். இதையடுத்து, கூட்டத்தைக் கட்டுப்படுத்தவும், அசம்பாவிதங்கள் ஏதும் ஏற்படாமல் இருக்கவும் போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா்.
