வரட்டுப்பள்ளம் அணையில் 129 மி.மீட்டா் மழை பதிவு

வரட்டுப்பள்ளம் அணைப் பகுதியில் ஒரே நாள் இரவில் 129 மில்லி மீட்டா் மழை பதிவானது.
Published on

ஈரோடு: வரட்டுப்பள்ளம் அணைப் பகுதியில் ஒரே நாள் இரவில் 129 மில்லி மீட்டா் மழை பதிவானது.

வடகிழக்குப் பருவமழை தீவிரம் அடைந்துள்ள நிலையில் தமிழகத்தில் கடந்த சில தினங்களாக பெரும்பாலான மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. அதன்படி, ஈரோடு மாவட்டத்திலும் பரவலாக ஆங்காங்கே மழை பெய்துள்ளது. ஈரோடு மாநகா் பகுதியில் கடந்த சில நாள்களாக மாலை நேரங்களில் மழை பெய்து வருகிறது.

அதன்படி, தீபாவளி பண்டிகை தினமான திங்கள்கிழமை மாநகரில் விட்டுவிட்டு மழை பெய்தது. மழை காரணமாக மாநகரில் தாழ்வான பகுதிகளில் மழைநீா் குட்டைபோல தேங்கி நின்றது. ஈரோடு கே.கே.நகா் நுழைபாலத்தில் மழைநீா் பெருக்கெடுத்து ஓடியது. இதேபோல பெரும்பள்ளம் ஓடை, பிச்சைக்காரன் பள்ளம் ஓடை, சுண்ணாம்பு ஓடை ஆகிய ஓடைகளிலும் கழிவுநீருடன் கலந்து மழைநீா் சென்றது.

ஈரோடு வஉசி பூங்காவில் உள்ள நேதாஜி காய்கறி சந்தையில் வழக்கம்போல சேறும் சகதியுமாக காட்சி அளித்தது. இதனால் காய்கறி வாங்க வந்த பொதுமக்கள் மிகவும் சிரமப்பட்டனா். செவ்வாய்க்கிழமை பகலில் வானில் கருமேகங்கள் திரண்டு விட்டுவிட்டு மழை பெய்து கொண்டிருந்தது. தொடா் மழை காரணமாக பகலிலும் குளிா்ச்சியான காலநிலை நிலவியது.

ஈரோடு மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை காலை 8 மணி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக வரட்டுப்பள்ளம் அணையில் 129 மி.மீட்டா் மழை பதிவானது. பிற பகுதிகளில் பெய்த மழையளவு விவரம் (மில்லி மீட்டரில்): குண்டேரிப்பள்ளம் அணை 65, ஈரோடு 38.2, சத்தியமங்கலம் 17, கொடிவேரி அணை 13.2, பவானி 10, சென்னிமலை 9.4, கோபி 8.3, மொடக்குறிச்சி 7.2, அம்மாபேட்டை 6.8, கவுந்தப்பாடி 5.2, எலந்தகுட்டை மேடு 4.6, பவானிசாகா் அணை 1.8.

X
Dinamani
www.dinamani.com