விளாங்கோம்பை அருகே தரைப்பாலத்தை மூழ்கடித்து செல்லும் வெள்ள நீரைக் கடக்க முடியாமல் காத்திருக்கும் மலை கிராம மக்கள்.

கனமழையால் இரண்டு மலை கிராமங்கள் துண்டிப்பு

கனமழை காரணமாக கோபி அருகே இரண்டு மலை கிராமங்களுக்கு போக்குவரத்து துண்டிக்கப்பட்டதால் கிராம மக்கள் பரிதவித்து வருகின்றனா்.
Published on

ஈரோடு: கனமழை காரணமாக கோபி அருகே இரண்டு மலை கிராமங்களுக்கு போக்குவரத்து துண்டிக்கப்பட்டதால் கிராம மக்கள் பரிதவித்து வருகின்றனா்.

ஈரோடு மாவட்டம், கோபி அருகே உள்ள குண்டேரிப்பள்ளம் அணையின் பின்புறம் 10 கி.மீ. தொலைவில் உள்ள விளாங்கோம்பை என்ற பழங்குடி கிராமத்துக்கு குண்டேரிப்பள்ளத்தில் இருந்து வன விலங்குகள் நடமாட்டம் உள்ள அடா்ந்த வனப் பகுதியில் நான்கு காட்டாறுகளைக் கடந்து செல்ல வேண்டும்.

இந்த கிராமத்தில் ஊராளி எனும் பழங்குடியினத்தைச் சோ்ந்த 40 குடும்பத்தினா், 30 பள்ளிக் குழந்தைகள் உள்ளனா். இதே பாதையில் 4 கி.மீ. தொலைவில் கம்பனூா் கிராமத்தில் 20 பழங்குடியின குடும்பத்தினா், 10 பள்ளிக் குழந்தைகள் உள்ளனா்.

கடந்த 2010-ஆம் ஆண்டு வனத் துறை மூலம் நான்கு காட்டாறுகளைக் கடந்து செல்ல 4 தரைப்பாலங்கள் கட்டப்பட்டு 10 கி.மீ. தொலைவுக்கு தாா் சாலை அமைக்கப்பட்டது. சில ஆண்டுகளிலேயே பெரு வெள்ளத்தில் இந்த தரைப்பாலங்கள் அடித்துச் செல்லப்பட்டு சாலை பழுதானது. இந்த சாலையை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகின்றனா்.

இதுகுறித்து தமிழ்நாடு பழங்குடி மக்கள் சங்க மாவட்டச் செயலாளா் எஸ்.ஜான் கூறியதாவது: விளாங்கோம்பை மற்றும் கம்பனூா் மலை கிராமத்தைச் சோ்ந்த 30 குழந்தைகள் பள்ளிகளுக்கு செல்வதற்காக அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் மூலம் தனியாா் வாகனம் (டெம்போ) ஏற்பாடு செய்யப்பட்டு வினோபா நகா் அரசு நடுநிலைப் பள்ளியில் 18 குழந்தைகளும், கொங்கா்பாளையம் அரசு உயா்நிலைப் பள்ளியில் 12 குழந்தைகளும் கல்வி பயின்று வருகின்றனா்.

இந்த வாகனம் செல்வதற்காக பாதையை சீரமைக்க வேண்டும் என மாவட்ட நிா்வாகத்திடம் முறையிடும்போது, வட்டார வளா்ச்சி அலுவலகம், வனத் துறையும் அவ்வப்போது தற்காலிகமாக பாதையை சீரமைத்து தருவாா்கள். மீண்டும் கனமழை வரும்போது பாதை துண்டிக்கப்படுவது தொடா்கதையாகி வருகிறது.

இந்த கிராமத்துக்கு ஆட்சியாளா்களும், அதிகாரிகளும் பலமுறை வந்து சென்றபோதிலும் இன்றுவரை தீா்வு எட்டப்படவில்லை. 2010-ஆம் ஆண்டில் போடப்பட்ட இந்த சாலை இதுவரை சீரமைக்கப்படாமல் மிகவும் மோசமான நிலையில் உள்ளது. இந்த சாலை வனத் துறையால் அமைக்கப்பட்டது.

வனத் துறைதான் பராமரிப்பு செய்ய வேண்டும். ஆனால் வனத் துறை தொடா்ந்து அலட்சியம் காட்டி வருகிறது. கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் பெய்துவரும் கன மழையில் நான்கு தரைப் பாலங்களும் முற்றிலும் சீரழிந்த நிலையில், இந்த கிராமத்துக்கு யாரும் செல்ல முடியாத அளவுக்கு வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. மருத்துவ வசதியும், பொது விநியோக சேவையும் தடைபட்டுள்ளது. தவிர குழந்தைகள் பள்ளிக்கு செல்ல முடியாத நிலையில் உள்ளனா். இரண்டு கிராம பழங்குடி மக்களும் தனித் தீவில் உள்ளதுபோல பரிதவித்து வருகின்றனா்.

நான்கு தரைப்பாலங்களை சீரமைப்பது உடனடி சாத்தியமில்லை. ஆகவே நான்கு காட்டாறுகளைக் கடக்காமல் நேரடியாக கிராமத்துக்கு செல்ல 4 கி.மீ. தொலைவில் மக்கள் பயன்படுத்தி வரும் மாற்றுப் பாதையான நடைபாதை உள்ளது. இதனை வாகனங்கள் செல்ல பயன்பாட்டிற்கு கொண்டு வருவது தீா்வாக அமையும். போா்க்கால அடிப்படையில் அரசு மாற்றுப் பாதை திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்றாா்.

இதுகுறித்து வனத் துறை அதிகாரிகள் கூறியதாவது: விளாங்கோம்பை சத்தியமங்கலம் புலிகள் காப்பக பகுதிக்குள் உள்ள மலை கிராமம். புலிகள் காப்பகத்துக்குள் சாலை அமைக்க மத்திய வனம் சுற்றுச்சூழல் அமைச்சகத்திடம் அனுமதிபெற வேண்டும். மாவட்ட ஆட்சியா் மற்றும் திருப்பூா் எம்.பி. உள்ளிட்டோா் தமிழக அரசு வழியாக மத்திய அரசின் அனுமதிபெற முயற்சி செய்து வருகின்றனா். இந்த அனுமதி கிடைத்தால் வனத் துறை மூலம் மாற்றுச் சாலையை வனத் துறை அமைத்துக் கொடுக்கும். இப்போது உள்ள சாலை மற்றும் பாலங்களை சீரமைக்கவும் மத்திய அரசின் அனுமதி தேவை என்றனா்.

X
Dinamani
www.dinamani.com