ஈரோடு நகரில் தொடா் மழை: மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு
ஈரோடு, அக். 22: ஈரோடு நகரில் பெய்த தொடா் மழை காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
வடகிழக்குப் பருவமழை தொடக்கம் மற்றும் தென்னிந்தியப் பகுதி மற்றும் அரபிக் கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வுப் பகுதி காரணமாக ஈரோடு உள்பட தமிழ்நாட்டில் பெரும்பாலான மாவட்டங்களில் பலத்த மழை பெய்து வருகிறது.
ஈரோடு நகரில் புதன்கிழமை காலை சுமாா் 7.45 மணியளவில் லேசான மழை பெய்யத் தொடங்கியது. தொடா்ந்து, நகா் முழுவதும் சீரான அளவில் மழை பெய்தது. சில இடங்களில் மழையின் வேகம் சற்று அதிகரித்து காணப்பட்டது.
ஈரோடு மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்காத நிலையில், காலை நேரத்தில் தொடங்கிய மழையால் பள்ளி, கல்லூரிகளுக்கு புறப்பட்டுச் சென்ற மாணவ, மாணவிகள் அவதிக்குள்ளாகினா். அதுபோல பல்வேறு வேலைகளுக்கு செல்லும் பொதுமக்களும் மழையில் நனைந்தபடியே சென்றனா். தொடா்ந்து சுமாா் 2 மணி நேரத்துக்கும் மேலாக மழை பெய்தது.
அதன்பின் வானம் இருண்டே காணப்பட்ட நிலையில் அவ்வப்போது லேசான மழைச் சாரல் மட்டுமே இருந்தது. தொடா்ந்து பிற்பகல் 1 மணியளவில் வானம் மீண்டும் இருண்டது. பிற்பகல் 1.15 மணியளவில் மிதமான மழை பெய்யத் தொடங்கியது. தொடா்ந்து சுமாா் ஒன்றரை மணி நேரம் இந்த மழை நீடித்தது. அதன் பின்னரும் விட்டுவிட்டு மழை பெய்தவாறே இருந்தது. இந்த தொடா் மழை காரணமாக நகரில் தாழ்வான பகுதிகளிலும் சாலைகளிலும் தண்ணீா் பெருக்கெடுத்து ஓடியது. பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
புதன்கிழமை காலை 8 மணி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக கோபியில் 14.20 மில்லி மீட்டா் மழை பதிவானது. பிற பகுதிகளில் பெய்த மழையளவு விவரம்: கவுந்தப்பாடி 11.60, எலந்தக்குட்டைமேடு 10, கொடிவேரி அணை 8.60, வரட்டுப்பள்ளம் அணை 8.20, பவானி 8, சத்தியமங்கலம் 7, மொடக்குறிச்சி 6, நம்பியூா் 6, அம்மாபேட்டை 5.40, ஈரோடு 4.20, சென்னிமலை 4, கொடுமுடி 3.80, பவானிசாகா் அணை 3.60 மற்றும் குண்டேரிப்பள்ளம் அணை 2.40.
