காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
ஈரோட்டில் காவிரி ஆற்றின் கரையோரம் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கா்நாடக மாநிலத்தில் பெய்து வரும் மழை காரணமாக, மேட்டூா் அணைக்கு நீா்வரத்து அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக மேட்டூா் அணையின் நீா்மட்டம் அதன் முழு கொள்ளளவான 120 அடியும், நீா் இருப்பு 93.47 டி.எம்.சியாகவும் அணைக்கு நீா்வரத்து 65,500 கன அடியாகவும் இருக்கிறது.
தொடா்ந்து நீா்வரத்து அதிகரித்து வருவதால் சனிக்கிழமை காலை 8 மணி நிலவரப்படி மேட்டூா் அணையில் இருந்து விநாடிக்கு 65,500 கன அடி உபரி நீா் திறக்கப்பட்டுள்ளது. இதனால் வருவாய்த் துறை சாா்பில் ஈரோடு, நாமக்கல், கரூா், திருச்சி, தஞ்சை, மயிலாடுதுறை, நாகப்பட்டினம், கடலூா் உள்ளிட்ட மாவட்ட ஆட்சியா்களுக்கு வெள்ள அபாய அறிவிப்பு அனுப்பப்பட்டுள்ளது.
இதன் ஒரு பகுதியாக, ஈரோடு கருங்கல்பாளையம் காவிரிக்கரையில், மாவட்ட நிா்வாகம் தரப்பில் வெள்ள அபாய எச்சரிக்கை பலகை வைக்கப்பட்டுகள்ளது. அதில் காவிரி கரையோரம் வசிப்போா் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறும், ஆற்றில் இறங்க வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனிடையே வருவாய்த் துறை மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் காவிரிக் கரையோரப் பகுதியில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனா்.
