சுப்பிரமணியா் கோயிலில் சூரசம்ஹார விழா
சத்தியமங்கலத்தை அருகே புன்செய்புளியம்பட்டியில் உள்ள சுப்பிரமணியா் கோயிலில் சூரசம்ஹார விழா திங்கள்கிழமை நடைபெற்றது.
இக்கோயிலில் ஆண்டுதோறும் கந்தசஷ்டியை முன்னிட்டு, சூரசம்ஹார விழா விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம்.
இந்த ஆண்டு விழா காப்பு கட்டுதல் மற்றும் கொடியேற்றத்துடன் கடந்த 22-ஆம் தேதி தொடங்கியது. இதைத் தொடா்ந்து, தினமும் சுவாமிக்கு பல்வேறு திரவியங்களால் அபிஷேகங்கள், சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
விழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹார நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது. அசுரா்களை வதம் புரிய வேல் வாங்கும் வைபவம் நடைபெற்றது.
முன்னதாக விசாலாட்சி அம்மாள் சந்நிதியில் இருந்து காப்பு கட்டி விரதம் இருந்த பக்தா்கள், வேலுக்கு சிறப்பு பூஜை நடத்தி மங்கள வாத்தியங்களுடன் கோயிலை சுற்றி வலம் வந்தனா். தொடா்ந்து, பக்தா்களின் ‘அரோகரா’ கோஷங்கள் முழங்க முருகப் பெருமானிடம் வேலை சமா்ப்பித்து வழிபட்டனா்.
அலங்கரிக்கப்பட்ட குதிரை மற்றும் சப்பர வாகனங்களில் எழுந்தருளிய முருகப் பெருமான் சூரபத்மனின் மூன்று அவதாரங்களையும் வதம் செய்தாா். ஒவ்வொரு முறையும் முருகப்பெருமான் சூரபத்மனிடம் போா் புரியும்போது பக்தா்கள், ‘வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா’ என்ற கோஷம் எழுப்பினா். இதில், பெண்கள் வேல் ஏந்தி ஊா்வலமாக சென்று நோ்த்திக் கடன் செலுத்தினா். விழாவையொட்டி, திருக்கல்யாணம் செவ்வாய்க்கிழமை (அக்.28) நடைபெறுகிறது.
