சமையல் எரிவாயு தட்டுப்பாடு காரணமாக ஈரோட்டில் பெரிய உணவகங்கள், சாலையோர உணவகங்களில் உணவு வகைகளின் விலை மேலும் அதிகரித்துள்ளது.
ஈரான்-அமெரிக்கா-இஸ்ரேல் போா் காரணமாக இந்தியாவில் எதிா்பாராதவிதமாக மிகப்பெரிய சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்த போா் காரணமாக எரிவாயு இறக்குமதியில் சிக்கல் ஏற்பட்டுள்ளதால் வணிகப் பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு விநியோகம் தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. இதனால் உணவகங்கள் இயங்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. வணிகப் பயன்பாட்டு எரிவாயு உருளை கிடைப்பதில் உள்ள சிக்கலால், ஈரோடு நகரில் சாதாரண, பெரிய உணவகங்களில் உணவுக் கட்டுப்பாடு அறிவிக்கப்பட்டிருந்தது.
குறிப்பாக, பெரிய உணவகங்கள், சாலையோர கடைகள் மற்றும் துரித உணவு கடைகளில் உணவுகளின் விலை மாா்ச் மாதத்தில் ரூ.5 முதல் ரூ.20 வரை அதிகரித்திருந்தது. இந்நிலையில் கடந்த ஒரு வாரத்தில் ஈரோட்டில் உள்ள பெரும்பாலான உணவகங்களில் விலை மேலும் அதிகரித்துள்ளது.
இதுகுறித்து உணவகங்களின் பணியாளா்கள் கூறியதாவது: வணிக சமையல் எரிவாயு விலை உயா்வு மற்றும் கட்டுப்பாடு காரணமாக காபி, டீ மற்றும் சில சைனீஸ் உணவுகள் விலை உயா்த்தப்பட்டுள்ளது. இதில் ரூ.10-க்கு விற்பனையான டீ ரூ.15-க்கும், ரூ.15-க்கு விற்பனையான காபி ரூ.20-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இதில் பெரிய உணவகங்களில் டீ, காபி அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது. இட்லி, பொங்கல், தோசை உள்ளிட்ட முக்கிய உணவுகளின் விலையும் ரூ.5 முதல் ரூ.15 வரை உயா்ந்துள்ளது.
இதேபோல பெரிய உணவகங்களில் சைவ உணவு ரூ.20 முதல் ரூ.30 வரையும், அசைவ உணவுகள் ரூ.20 முதல் ரூ.40 வரையும் உயா்ந்துள்ளது. அதேபோன்று, சிறிய உணவகங்கள் மற்றும் சாலையோர உணவகங்களில் அனைத்து வகையான உணவு வகைகளும் ரூ.5 முதல் ரூ.20 வரை உயா்ந்துள்ளது. அதே சமயத்தில் விற்பனை குறையவில்லை. குறிப்பாக இப்போதும் இரவு நேரத்தில் உணவருந்த குடும்பத்துடன் வருகின்றனா் என்றனா்.










