குந்தா வட்டாட்சியர் அலுவலகத்தில் 2 நாள் ஜமாபந்தி நிகழ்ச்சி புதன்கிழமை நிறைவடைந்தது. இதில் 135 மனுக்கள் பெறப்பட்டு மேல்நடவடிக்கைக்காக அனுப்பி வைக்கப்பட்டன.
நீலகிரி மாவட்டத்தில், குந்தா வட்டாட்சியர் அலுவலகத்தில் 2 நாள் ஜமாபந்தி நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை தொடங்கியது. அன்றைய தினம் இத்தலார் பிர்காவிற்கு உள்பட்ட இத்தலார், முள்ளிகூர் மற்றும் பிக்கட்டி கிராமங்களுக்கு ஜமாபந்தி நடைபெற்றது.
புதன்கிழமை குந்தா பிர்காவிற்கு உள்பட்ட கீழ்குந்தா, மேல்குந்தா மற்றும் கிண்ணக்கொரை உள்ளிட்ட கிராமங்களுக்கு ஜமாபந்தி நடைபெற்றது. மாவட்ட துணை ஆட்சியர் (நிலம்) தினகரன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் குந்தா வட்டாட்சியர் குமரேசன், சமூக பாதுகாப்புத் திட்ட வட்டாட்சியர் எஸதர் சாந்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்நிகழ்ச்சியில் உதகை சட்டப்பேரவை உறுப்பினர் புத்திசந்திரன், கீழ்குந்தா பேரூராட்சித் தலைவர் ஜெயச்சந்திரன், செயல் அலுவலர் மணிகண்டன், குந்தா ஊராட்சித் தலைவர் வனிதா பிரகாஷ் ஆகியோருடன் அனைத்து துறைகளின் அலுவலர்கள் பங்கேற்றனர்.
இக்கூட்டத்தில், பொதுமக்கள் தரப்பில் நலத்திட்ட உதவிகள், வீட்டுமனைப்பட்டா மற்றும் அடிப்படை வசதிகளை நிறைவேற்றக் கோரி மனுக்கள் கொடுக்கப்பட்டன. அத்துடன், கூட்டத்தில் பங்கேற்றிருந்த முதியோர்கள், தங்களுக்கு கடந்த 2 மாதங்களாக வழங்கப்படாத உதவித்தொகையை உடனடியாக வழங்கக் கேட்டு மனு கொடுத்தனர். இதில், 135 மனுக்கள் பெறப்பட்டன. உதகை சட்டப்பேரவை உறுப்பினர் புத்திசந்திரன் மற்றும் வட்டாட்சியர் தினகரன் ஆகியோர் அம்மனுக்கள் மீது உடனடியாக உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படுமென உறுதியளித்தனர். இதையடுத்து அம்மனுக்கள் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு மேல்நடவடிக்கைக்காக அனுப்பிவைக்கப்பட்டன.
இக்கூட்டத்தில், திருமண உதவித்தொகை, ஈமச்சடங்கு உதவித்தொகை மற்றும் புதிய குடும்பஅட்டைகள் என மொத்தம் 15 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டதாக வருவாய்த் துறையினர் தெரிவித்தனர்.