மாநில அளவில் 12 ஹாக்கி அணிகளுக்கு இடையேயான ஹாக்கிப் போட்டிகள் குன்னூர், அபிபுல்லா ராணுவ மைதானத்தில் திங்கள்கிழமை துவங்கின.
போட்டிகளை மெட்ராஸ் ராணுவ மையத் தலைவர் பிரிகேடியர் எஸ்.சுரேஷ்குமார் துவக்கி வைத்தார். சிறப்பு அழைப்பாளராக தமிழகத் தடகள சங்கத் தலைவர் வால்டர் தேவாரம் பங்கேற்றார். சனிக்கிழமை வரை நடைபெறவுள்ள இப்போட்டியில் அரையிறுதி வரை லீக் ஆட்டமும் அதற்கு பின் நாக்-அவுட் முறையிலும் போட்டிகள் நடைபெறவுள்ளன. குன்னூர் விளையாட்டு மேம்பாட்டு அறக்கட்டளை சார்பில் நடைபெற்ற இப்போட்டிகளின் முதல் நாள் ஆட்டத்தில் திருச்சி ஜோ.ஜோ அணியும் சென்னை சாய் அணியும் மோதின. இதில், 5 - 0 என்ற கோல் கணக்கில் சாய் அணி வெற்றி பெற்றது.
நாளை நடைபெறும் போட்டியில் சென்னை எஸ்ஆர்எம் அணியும், திருவாரூர் அணியும் மோதுகின்றன. இறுதிப் போட்டி வரும் 27-ஆம் தேதி நடைபெறும் என்றும், அதில் வெற்றி பெறும் அணிக்கு வெற்றிக் கோப்பையும், ரூ. 25,000-மும் வழங்கப்படும் என்றும் போட்டி ஒருங்கிணைப்பாளர் அனந்தகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.