பச்சைத் தேயிலை கிலோவுக்கு ரூ. 30 விலை நிர்ணயம் செய்ய வலியுறுத்தி விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
நீலகிரி மாவட்டத்திலுள்ள பட்டா தடைச் சட்டத்தை நீக்க வலியுறுத்தியும், தோட்டத் தொழிலாளர்களுக்கு மாத சம்பளமாக ரூ. 30 ஆயிரம் வழங்கக் கோரியும், யானைகள் தாக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு இழப்பீடாக ரூ. 10 லட்சமும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வலியுறுத்தியும் கூடலூர் புதிய பேருந்து நிலையம் சந்திப்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாவட்டச் செயலாளர் க.சகாதேவன் தலைமை வகித்தார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டக் குழு உறுப்பினர் என்.வாசு வாழ்த்திப் பேசினார். விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட துணைச் செயலாளர் து.புவனேஸ்வரன், நிர்வாகிகள் கதிர், பிரகாஷ், பந்தலூர் நிர்வாகிகள் மகேஷ், கரிகாலன், யோகானந்தன், கமலேஷ், பாபு, திருச்செல்வம் உள்பட பலர் கலந்துகொண்டனர்.