சுடச்சுட

    

    குன்னூரில் விதியை மீறி கட்டப்பட்ட 11 கட்டடங்களுக்கு சீல்

    By குன்னூர்  |   Published on : 08th September 2015 07:07 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    குன்னூரில் விதிமுறைக்குப் புறம்பாக கட்டப்பட்ட 11 கட்டடங்களுக்கு நகராட்சி அதிகாரிகள் திங்கள்கிழமை சீல் வைத்தனர்.

     நீலகிரி மாவட்டத்தில் விதிமுறைக்குப் புறம்பாக கட்டப்பட்டுள்ள கட்டடங்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதனடிப்படையில், ஒய்வு பெற்ற நீதிபதி சந்துரு தலைமையிலான கமிட்டி அமைக்கப்பட்டது.

     அதன்படி, குன்னூர் நகரப் பகுதியில் மட்டும் 922 கட்டடங்கள் அனுமதியின்றி கட்டப்பட்டுள்ளதாக நகராட்சி நிர்வாகம் சார்பில் நீதிமன்றத்தில் அறிக்கை சமர்பிக்கப்பட்டுள்ளது.

     கடந்த 3 மாதத்திற்கு முன்பு நகரப் பகுதியில் விதிமுறைக்குப் புறம்பாக கட்டப்பட்டுள்ள 21 கட்டடங்களுக்கு சீல் வைக்கப்பட்டது. இந்நிலையில், கட்டட உரிமையாளர்கள் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தனர். இதில், 3 முதல் 6 மாதம் வரை அவகாசம் கொடுக்கப்பட்டு, அதற்குள் அரசு உத்தரவுப்படி கட்டடங்களை வரைமுறைப்படுத்த வேண்டும் என உத்தரவிடப்பட்டது.

     ஆனால், பெரும்பாலானோர் இன்று வரை அதற்கான நடவடிக்கையை எடுத்ததாகத் தெரியவில்லை. மேலும், குடியிருப்பு என்ற பெயரில் அனுமதி பெற்று வணிகப் பயன்பாட்டிற்காக கட்டடங்கள் இன்று வரை பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

     இதுபோன்ற சூழலில் உயர்நீதி மன்றம் மூலமாக நிர்ணயிக்கப்பட்ட கமிட்டியினர் ஆய்வுக்கு வர உள்ளதால், நகராட்சி அதிகாரிகள் விதிமுறையை மீறிய கட்டடங்களுக்கு சீல் வைக்கும் பணியை தொடங்கியுள்ளனர். 

     முதல் கட்டமாக, டானிங்டன் பிரிட்ஜ், பெட்போர்ட், டென்ட்ஹில், கேஸ் பஜார் உள்ளிட்ட பகுதிகளில் 11 கட்டடங்களுக்கு சீல் வைக்கப்பட்டது. ரயில் நிலையம் அருகே உள்ள விடுதியில் அனுமதியின்றி கட்டப்பட்டுள்ள 2 மேல்தளங்களில் 50-க்கும் மேற்பட்ட அறைகளுக்கு சீல் வைக்கப்பட்டது.

     தொடர்ச்சியாக, நீதிமன்ற அவகாசம் முடிவு பெற்றுள்ள அனைத்து கட்டடங்கள் மீதும் இதுபோன்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    நகர அமைப்பு அலுவலர் ரவி தலைமையில் கட்டட ஆய்வாளர் மீனாட்சி, ஊழியர்கள் ஆகியோர் இப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai