சுடச்சுட

    

    குன்னூர் நகர்மன்றக் கூட்டத்தில் திமுக - அதிமுகவினர் மோதல்

    By dn  |   Published on : 09th September 2015 04:14 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    குன்னூர் நகர்மன்றக் கூட்டத்தில் குடிநீர் கட்டணம், வீட்டு வரி உயர்வுக்கு கண்டனம் தெரிவித்து திமுக - அதிமுகவினர் தண்ணீர் பாட்டில்களை வீசி  மோதலில் ஈடுபட்டனர்.

    குன்னூர் நகரமன்ற அவசரக் கூட்டம் அதன் தலைவர் டி.சரவணக்குமார் தலைமையில்  செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

    இக்கூட்டத்திற்கு, ஆணையர் (பொ) சண்முகம் முன்னிலை வகித்தார். கூட்டத்தின் துவக்கத்தில் தலைவர் பேசுகையில், "குன்னூர் நகர மக்கள் நலன் கருதி சமீபத்தில் உதகை அருகே உள்ள எமரால்டு அணையில் இருந்து குடிநீர் கொண்டு வரும் திட்டம் அறிவிக்கப்பட்டது. இதற்காக அரசு சார்பில் ரூ. 40 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதற்கு நன்றி தெரிவிப்பதுடன் இத்திட்டத்தை முழுமையாக்க நகராட்சியின் நிதியாதாரத்தைப் பெருக்க முடிவு செய்யப்பட்டுள்ளது என்றார்.

    இதையடுத்து, திமுக கவுன்சிலர் முபாரக் பேசுகையில், நகரப் பகுதியிலுள்ள 5,995 வீட்டுக் குடிநீர் இணைப்புகளுக்கு ரூ. 7,000, வணிகப் பயன்பாட்டிற்கு ரூ. 15,000 எனக் கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளது. கூடுதல் கட்டணம் மூலமாக நகராட்சிக்கு ரூ. 3.5 கோடி வருவாய் கிடைக்கும் எனக் கூறி வரும் நிலையில், ரூ. 6 கோடி வரை வருவாய் கிடைக்கும் வகையில் கட்டணம் உயர்த்தப்படுவது ஏன்?‘ என்றார்.

    அதற்கு பதிலளிக்கும் விதமாக அதிமுக கவுன்சிலர் சத்தார், "நகர மக்களின் நலன் கருதித்தான் இத்திட்டம் அமல்படுத்தப்படுகிறது. திமுகவினர் வேண்டுமானால் உங்களது எம்எல்ஏவிடம் நிதி பெற்றுக் கொடுங்கள்' என்றார்.

    அதிமுக கவுன்சிலரின் பேச்சிற்கு திமுக கவுன்சிலர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

    இந்நிலையில், அதிமுக கவுன்சிலர் ஒருவர் குடிநீர் பாட்டிலை எடுத்து திமுகவினரை நோக்கி வீசினார்.

     பதிலுக்கு திமுகவினரும் குடிநீர் பாட்டிலை அதிமுகவினரை நோக்கி வீசினர். இதையடுத்து, கூட்டம் பாதியில் நிறுத்தப்பட்டது.

    தொடர்ந்து திமுகவினர் மன்ற வளாகத்தில் உள்ளிருப்புப் போராட்டத்திலும்,  ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai