சுடச்சுட

  

  ஏரியில் கழிவுநீர் கலப்பு: தேனிலவு படகு இல்லம் 15 நாள்களுக்கு மூடல்

  By உதகை  |   Published on : 10th September 2015 05:39 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  உதகை படகு இல்ல ஏரியில் கழிவுநீர் கலந்ததையடுத்து தேனிலவு படகு இல்லம் 15 நாள்களுக்கு மூடப்பட்டுள்ளது.

  உதகையின் முக்கிய சுற்றுலாத் தலங்களில் ஒன்று படகு இல்லம். இங்குள்ள ஏரியைச் சுற்றிலும் உள்ள தனியார் தங்கும் விடுதிகளிலிருந்தும், கோடப்பமந்து கால்வாயிலிருந்தும் வெளியேறும் கழிவுநீர் படகு இல்லம் ஏரியில் கலந்து வந்தது. இதனால், ஏரி நீர் மாசடைந்து படகு இல்லமே துர்நாற்றம் வீசியது. இதையடுத்து, மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் மேற்கொண்ட நடவடிக்கையில் ஏரி நீரை சுத்திகரிக்கும் பணிகள் நடைபெற்று, படகு இல்லத் தண்ணீர் சீரமைக்கப்பட்டது.

  இந்நிலையில், தமிழக அரசு சார்பில் ஏரி நீரைச் சுத்திகரிக்கவும், படகு இல்லத்தை சீரமைக்கவும் ரூ. 25 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

  இதற்கிடையே, கூடுதல் படகு இல்லமான தேனிலவு படகு இல்லம் அமைந்துள்ள ஏரியில் அப்பகுதியில் உள்ள தனியார் தங்கும் விடுதிகளின் கழிவுகள் கலப்பதாகவும், இதனால், ஏரி நீர் கருப்பு நிறமாக மாறிவிட்டதாகவும் புகார் எழுந்ததது. இதையடுத்து, சுற்றுலாப் பயணிகள் படகு சவாரி மேற்கொள்வதைத் தவிர்த்தனர்.

   இதைத்தொடர்ந்து, மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தினர், உதகை நகர்மன்ற அலுவலர்கள், சுற்றுலாத் துறை அதிகாரிகள் புதன்கிழமை ஏரியில் ஆய்வு செய்தனர். அப்போது, கூடுதல் படகு இல்லம் அமைந்துள்ள பகுதியில் உள்ள ஒரு தனியார் தங்கும் விடுதியின் கழிவுகள் ஏரியில் கலப்பது தெரியவந்தது.

  இதையடுத்து, ஏரியிலுள்ள மாசடைந்த கழிவுநீரை வெளியேற்றும் வரை தேனிலவு படகு இல்லம் 15 நாள்களுக்கு தாற்காலிகமாக மூடப்படுவதாக சுற்றுலாத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும், கழிவுநீரை ஏரியில் கலந்த தனியார் தங்கும் விடுதியின் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் தெரிவித்தனர்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai