Enable Javscript for better performance
பசுந்தேயிலைக்கு மாத விலை நிர்ணயம்: தேயிலை வாரியம் அறிவிப்பு- Dinamani

சுடச்சுட

    

    பசுந்தேயிலைக்கு மாத விலை நிர்ணயம்: தேயிலை வாரியம் அறிவிப்பு

    By குன்னூர்  |   Published on : 13th September 2015 08:18 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    நீலகிரி மாவட்டத்தில் விளையும் பசுந்தேயிலைக்கு மாத விலையை தேயிலை வாரியம் சனிக்கிழமை அறிவித்தது.

     நீலகிரி மாவட்டத்தில் உற்பத்தி செய்யப்படும் தேயிலைத் தூள்களில் பெரும்பாலானவை குன்னூரில் உள்ள அரசு, சிடிடிஏ தேயிலை ஏல மையங்கள் மூலமாக விற்பனை செய்யப்படுகிறது. இதில், பசுந்தேயிலைக்கு போதிய விலை கிடைக்காததால் விவசாயிகள் பாதிப்படைந்து வருவதைத் தவிர்க்க, நீதிமன்ற உத்தரவுப்படி விலை கண்காணிப்பு கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது.

     இந்த கமிட்டியினரின் நடவடிக்கைக்கு தேயிலை உற்பத்தியாளர்கள் தரப்பில் இடைக்கால தடை பெற்றிருந்தாலும், மாதந்தோறும் விலை நிர்ணயிக்கப்பட்டு அதன் விவரத்தை விவசாயிகளுக்கு அறிவிக்கலாம் என தெரிவிக்கப்பட்டதால் மாதந்தோறும் தேயிலை வாரியம் சார்பில் சுற்றரிக்கை அனுப்பப்படுகிறது.

     அதன்படி, கடந்த மாதத்திற்கான விலை நிர்ணயம் குறித்து தேயிலை வாரியம் அறிக்கை வெளியிட்டுள்ளது. இதில், ஏல மையங்களில் தேயிலைத் தூளுக்கு கிடைத்த விலைக்கு ஏற்றாற் போல் பசுந்தேயிலைக்கு உண்டான விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 

     அதனடிப்படையில், 1 கிலோ பசுந்தேயிலைக்கு குன்னூரில் ரூ. 10.18, கோத்தகிரியில் ரூ. 11.53, கூடலூரில் ரூ. 10.42, குந்தாவில் ரூ. 7.69, பந்தலூரில் ரூ. 10.23, உதகையில் ரூ. 9.80 என விலை வழங்க கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

     மேலும், 12-ஆவது ஐந்தாண்டுத் திட்டத்தின் கீழ் தேயிலை வாரியம் மூலமாக தேயிலை மறுநடவு, கவாத்து செய்தல் ஆகியவற்றிற்கு மானியம் வழங்குவதுடன் மகளிர் குழு, தேயிலை கூட்டுறவுச் சங்கங்கள் உள்ளிட்டவற்றிற்கு இலை பை, குடோன், வாகனங்கள் வாங்குவது உள்ளிட்டவற்றிற்கு மானியம் வழங்கப்படுவதால் விவசாயிகள் உடனடியாக கோத்தகிரி, குந்தா, கூடலூர், குன்னூரில் உள்ள தேயிலை வாரிய தலைமை அலுவலகத்தை தொடர்பு கொண்டு தரமான பசுந்தேயிலை உற்பத்தி செய்து உலக மார்க்கெட்டில் நீலகிரி தேயிலைத் தூளுக்கு என தனி முத்திரையை ஏற்படுத்த அனைவரும் முன்வர வேண்டும் என அறிவித்துள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai