Enable Javscript for better performance
மழை நீரைத் தேக்கி வைத்து 3 போகம் விவசாயம்ஏ.பேட்ரிக்- Dinamani

சுடச்சுட

  

  மழை நீரைத் தேக்கி வைத்து 3 போகம் விவசாயம்ஏ.பேட்ரிக்

  By உதகை  |   Published on : 14th September 2015 03:14 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  நீலகிரி விவசாயிகள் மழைக்காக காத்திருக்காமல், மழை பெய்யும்போது அந்த நீரைத் தேக்கி வைத்து 3 போகமும் பயிரிட மத்திய மண், நீர்வளப் பாதுகாப்பு நிறுவனம் புதிய உத்திகளை அறிமுகப்படுத்தியுள்ளது.

  அதன்படி, தேக்கி வைக்கப்படும் மழை நீர் கசிவுக் குட்டைகளில் உபரி வருமானத்திற்காக மீன் வளர்ப்பதோடு, விவசாய நிலங்களின் சரிவுகளில் கால்நடைகளின் தேவைக்காக தீவனப்புல் சாகுபடியையும் மேற்கொள்வதால் 3 வகையிலான வருவாயும் கிடைக்கிறது.

  நீலகிரியில் சராசரியாக ஆண்டுக்கு 150 நாள் வரை இருந்த மழை, தற்போது 90 நாள்களாக குறைந்துவிட்டது. மழை நாள்கள் குறைந்தாலும், மழையின் அளவு குறையவில்லை. நடப்பாண்டில் ஜூலை மாதத்தில் 75 சதவீத மழையும், ஆகஸ்டு மாதத்தில் 45 சதவீதம் என சராசரியை விட குறைவாகவே பெய்துள்ளது, ஆனால், கடந்த ஏப்ரல் மாதத்தில் 145 சதவீதமும், மே மாதத்தில் 155 சதவீதமும் மழை பெய்துள்ளது.

  இத்தகைய சூழலில் மழை நீர் தொடர்பான புதிய உத்தியை உதகை அருகே கோத்தர் இன பழங்குடியினர் வசிக்கும் திருச்சிக்கடி கிராமத்தில் மத்திய மண், நீர்வள பாதுகாப்பு நிறுவனம் செயல்படுத்தியுள்ளதோடு, இத்தகைய திட்டத்தை கோத்தகிரியில் 4 இடங்களிலும், கூடலூரில் ஓரிடத்திலுமாக மேலும் 5 இடங்களில் விரிவுபடுத்தவும் திட்டமிட்டுள்ளது.

  இதுதொடர்பாக, மத்திய மண், நீர்வள ஆராய்ச்சி நிறுவனத்தின் தலைவர் (பொ), முதன்மை விஞ்ஞானி டாக்டர் கண்ணன் தெரிவித்ததாவது:

  மழை நீரை வீணாக்காமல் சேமித்து பயன்படுத்தும் வகையில் நீலகிரி மாவட்டத்தில் பண்ணை குட்டைகள் அமைக்கப்பட்டு வருகின்றன. இத்தகைய திட்டத்திற்கு மத்திய, மாநில அரசுகள் சமவெளிப் பகுதிகளில் அதிகளவிலான முக்கியத்துவம் தந்தாலும், மலை மாவட்டமான நீலகிரியில் இதற்கு அதிக முக்கியத்துவம் அளிக்கவில்லை. இதனால், காய்கறி பயிர்களில் அதிகளவில் முதலீடு செய்த விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்படுவதோடு, காய்கறி பயிரிடுவது தொடர்பாக உரிய முடிவை எடுக்க முடியாத நிலையும் ஏற்பட்டுள்ளது.

  இத்தகைய பருவநிலை மாற்றங்களை எதிர்கொள்வதற்காக அதிகளவில் மழை பெய்யும்போது அதை சேமிக்கவும், வறட்சிக் காலங்களில் அதை முறையாக பயன்படுத்தவும் மக்கள் பங்களிப்புடன் கூடிய திட்டமே திருச்சிக்கடி கிராமத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதன் மூலமாக இந்த கிராமத்தில் உள்ள நிலங்கள் பயனடைந்துள்ளதோடு, 3 போக விளைச்சலும் எடுக்கப்பட்டு இருமடங்கு லாபம் ஈட்டப்பட்டுள்ளது.

  அதேபோல, பண்ணைக் குட்டைகளில் வருமானத்தைப் பெருக்குவதற்காக கண்ணாடி கெண்டை மீன்களும் வளர்க்கப்படுகின்றன. இதன் மூலமாக மாவட்டத்தில் மீன் உற்பத்தியையும் அதிகரிக்க முடியும். மேலும், கால்நடைகளுக்கான பசுந்தீவன தேவையும் அதிகரித்து வருவதால் விவசாய நிலங்களின் சரிவுகளில் நேப்பியர் ரக புல் வளர்ப்பதன் மூலமாக ஹெக்டேருக்கு 20 டன் வரை அறுவடை செய்ய முடிகிறது. இதன் மூலமாக கால்நடைகளுக்கான உணவுத் தேவையும் தீர்க்கப்படுகிறது.

  நீலகிரி மாவட்டம் ஆழ்துளை கிணறுகள் மூலமாக நீரை உறிஞ்சுவதற்கு ஏற்ற மாவட்டமில்லை. இவ்வாறு நீரை உறிஞ்சும்போது அங்கு ஏற்படும் வெற்றிடங்களால் மண் சரிவுகளே

  அதிகரிக்கும்.

  மேற்குத் தொடர்ச்சி மலை மிக பழமையான மலை என்பதால் இதுவரையிலும் இயற்கை பாதிப்புகளை சமாளித்து வருகிறது.

  ஆனால், அழுத்தம் மேலும் அதிகரிக்கும்போது இமாலயத்தில் ஏற்பட்டதைப் போன்ற பிரச்னைகள் ஏற்படலாம் என்பதால் சுற்றுச்சூழலை பாதுகாப்பதோடு, மழை நீரை வீணாக்காமல் அதிக லாபம் ஈட்டும் இந்த புதிய தொழில்நுட்பத்தை தமிழக அரசு வேளாண்மை பொறியியல் துறையின் மூலமாக செயல்படுத்த பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக வும் அவர் தெரிவித்தார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம்
   பகிரப்பட்டவை
  google_play app_store
  kattana sevai