Enable Javscript for better performance
குன்னூர் தேயிலைக் கிடங்குகளை கோவைக்கு மாற்ற எதிர்ப்பு: மறியலில் ஈடுபட்ட 200 பேர் கைது- Dinamani

சுடச்சுட

    

    குன்னூர் தேயிலைக் கிடங்குகளை கோவைக்கு மாற்ற எதிர்ப்பு: மறியலில் ஈடுபட்ட 200 பேர் கைது

    By குன்னூர்  |   Published on : 15th September 2015 06:39 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    குன்னூர் தேயிலைக் கிடங்குகளை கோவைக்கு இடமாற்றம் செய்ய எதிர்ப்புத் தெரிவித்து, சாலை மறியலில் ஈடுபட்ட தேயிலை பாரம் தூக்கும் தொழிலாளர்கள் 200-க்கும் மேற்பட்டோரை காவல்துறையினர் திங்கள்கிழமை கைது செய்தனர்.   

    நீலகிரி மாவட்டத்தில் உற்பத்தி செய்யப்படும் தேயிலைத் தூள்கள், குன்னூரில் உள்ள அரசு, தனியார் ஏல மையங்கள் மூலமாக விற்பனை செய்யப்படுகிறது. அனைத்து தேயிலைத் தூள்களும் இப்பகுதியில் உள்ள கிடங்குகளில் பாதுகாக்கப்பட்டு ஏலம் மூலமாக கொள்முதல் செய்யப்படுகிறது.

    இவை இங்கிருந்து வெளிமாநிலங்கள், வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இந்தத் தொழிலை நம்பி 400-க்கும் மேற்பட்ட பாரம் தூக்கும் தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.

    இந்நிலையில், இந்த தேயிலைத் தூள் கிடங்குகளை கோவை, காரமடை பகுதிக்கு இடமாற்றம் செய்வதைக் கண்டித்து, டீ செஸ்ட் லிப்டர்ஸ் யூனியன் தொழிலாளர்கள் தொடர்ந்து பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

    அதைத் தொடர்ந்து, தேயிலைக் கிடங்குகளை கோவைக்கு மாற்றுவதால் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாகக் கூறி, திங்கள்கிழமை குன்னூர் - உதகை சாலையில் மறியலில் ஈடுபட்ட தொழிலாளர்கள் 200-க்கும் மேற்பட்டோரை காவல்துறையினர் கைது செய்து மண்டபத்தில் தங்க வைத்தனர்.

    உள்ளிருப்புப் போராட்டம்: இப்பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வு ஏற்படும் வரை தாங்கள் மண்டபத்தை விட்டுச் செல்வதில்லை எனக் கூறி தொழிலாளர்கள் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதையடுத்து, குன்னூர் வட்டாட்சியர் ஜான்மனோகர் ராஜ் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது.

    அதில், தொழிலாளர் நல அதிகாரி முன்னிலையில் செப்டம்பர் 16-ஆம் தேதி, இதுதொடர்பாக, பேச்சுவார்த்தை நடத்தி முடிவெடுக்கப்படும் என உறுதி அளித்ததையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai