சுடச்சுட

    

    தேயிலை பாரம் தூக்கும் தொழிலாளர்களின் பேச்சுவார்த்தை தோல்வி: ரூ. 5 கோடி மதிப்பிலான தேயிலைத் தூள் தேக்கம்

    By குன்னூர்  |   Published on : 19th September 2015 06:08 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    குன்னூர் கோட்டாட்சியர் முன்னிலையில் தேயிலை பாரம் தூக்கும் தொழிலாளர்கள் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தது. இதனால், ரூ. 5 கோடி மதிப்பிலான தேயிலைத் தூள் தேக்கமடைந்துள்ளது.

     நீலகிரி மாவட்டத்தில் 63 ஆயிரம் சிறு, குறு தேயிலை விவசாயிகள் உள்ளனர். 183 தொழிற்சாலைகள் உள்ளன. இங்கு உற்பத்தி செய்யப்படும் தேயிலைத் தூள்கள் குன்னூரில் உள்ள கிடங்குகளில் தேக்கி வைக்கப்பட்டு தனியார், அரசு ஏல மையங்கள் மூலமாக விற்பனை செய்யப்படுகிறது.  இந்நிலையில், திடீரென ஒரு சில தொழிற்சாலை உரிமையாளர்கள் மேட்டுப்பாளையத்தில் தேயிலைக் கிடங்குகளை வாடகைக்கு எடுத்து அதில் இருப்பு வைத்து குன்னூர் ஏல மையம் மூலமாக விற்பனை செய்து வருகின்றனர். இதேபோல, காரமடை பகுதியிலும் சிலர் கிடங்குகளை இருப்பு வைக்க முயற்சித்ததால், தேயிலைத் தூள் பாரம் தூக்கும் தொழிலாளர்களுக்கு வேலை இழப்பு ஏற்பட்டது.

     இதையடுத்து, தேயிலை பாரம் தூக்கும் தொழிலாளர்கள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர். கடந்த 14-ஆம் தேதியில் இருந்து வேலை நிறுத்தப் போராட்டத்திலும் ஈடுபட்டுள்ளனர்.

     இந்நிலையில், குன்னூர் வருவாய்க் கோட்டாட்சியர் பழனிகுமார் தலைமையில், தொழிற்சாலை உரிமையாளர்கள், கிடங்கு உரிமையாளர்கள், தேயிலைத் தூள் பாரம் தூக்கும் தொழிலாளர்கள் இடையே பேச்சுவார்த்தை வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

     இதில், வட்டாட்சியர் ஜான்மனோகர், தொழிலாளர் அலுவலர் வாசுகி, தேயிலை வாரியம் சார்பில் சுரேஷ், சிஐடியூ தொழிற்சங்க மாவட்டச் செயலாளர் ஹால்துரை, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளர் ஆர்.பத்ரி, தேயிலை பாரம் தூக்கும் தொழிற்சங்கத் தலைவர் கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

     இப்பேச்சுவார்த்தையில், தேயிலைக் கிடங்குகளை மேட்டுப்பாளையம், காரமடை பகுதியில் வைக்க தேயிலை வாரியம் அனுமதி அளித்துள்ளது. இதனால், 400-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள், லாரி உரிமையாளர்கள் உள்ளிட்டோர் வேலை இழந்துள்ளனர். எனவே, மீண்டும் குன்னூரிலேயே தேயிலைக் கிடங்குகளை செயல்படும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தொழிலாளர்கள் வலியுறுத்தினர்.

     ஏல மையம் மற்றும் உற்பத்தியாளர்கள் தரப்பில் கூறியதாவது: காரமடை, மேட்டுப்பாளையம் பகுதியில் உள்ள கிடங்குகளுக்கு தேயிலை மூட்டைகளை ஏற்றி இறக்க குன்னூரில் இருந்து 50 தொழிலாளர்களை பணியமர்த்த நடவடிக்கை எடுக்கப்படும். தேயிலை வாரியம் இதை அறிவுறுத்தியதன் பேரில், 55,000 சதுர அடிக்கு மேல் கிடங்குகளை அதிகப்படுத்த மாட்டோம் எனக் கூறினார்.

     இதை ஏற்றுக் கொள்ளாத பாரம் தூக்கும் தொழிலாளர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தை தொடர்வதாக அறிவித்தனர். மேலும், வரும் திங்கள்கிழமை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கவுள்ளதாகவும் தெரிவித்தனர்.

     போரட்டம் காரணமாக, சுமார் 5 கோடி மதிப்பிலான தேயிலைத் தூள்கள் தேக்கமடைந்துள்ளன.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai