சுடச்சுட

    

    ஊட்டி வர்க்கி தரமானதா? உணவுக் கட்டுப்பாட்டுத் துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு

    By உதகை  |   Published on : 22nd September 2015 05:37 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ஊட்டி வர்க்கி சுகாதாரமான முறையில் தயாரிக்கப்படுகிறதா என்பது குறித்து உதகையில் உணவுக் கட்டுப்பாட்டுத் துறை அதிகாரிகள் திங்கள்கிழமை திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.

     உதகையில் ஊட்டி வர்க்கி தயாரிப்பில் 20-க்கும் மேற்பட்ட அடுமனைகள் ஈடுபட்டுள்ளன. இந்த வர்க்கிகள் சுகாதாரமற்ற முறையில் இருப்பதாகவும், வர்க்கி தயாரிக்க மாட்டுக் கொழுப்பு போன்றவை அதிகளவில் பயன்படுத்துவதாகவும் நீலகிரி மாவட்ட உணவுக் கட்டுப்பாட்டுத் துறை அலுவலர்களுக்கு கடந்த 2 மாதங்களாக தொடர்ந்து புகார்கள் வந்திருந்தன.

     இதைத்தொடர்ந்து, மாவட்ட உணவுக் கட்டுப்பாட்டு அலுவலர் டாக்டர் ரவி தலைமையில், உதகையில் உள்ள ஊட்டி வர்க்கி தயாரிக்கும் அடுமனைகளில் திங்கள்கிழமை திடீர் சோதனை நடத்தப்பட்டது.

     சோதனையின்போது, உணவுப் பொருள்களில் பயன்படுத்தக் கூடாத சில ரசாயனப் பொருள்கள் பயன்படுத்துவது கண்டறியப்பட்டதால், சில அடுமனைகளில் உற்பத்தியை உடனடியாக நிறுத்த உத்தரவிடப்பட்டது. மேலும், அங்கு ஏற்கெனவே தயாரித்து வைக்கப்பட்டிருந்த வர்க்கி, பிஸ்கட் போன்றவையும் பறிமுதல் செய்யப்பட்டன.

     இதுதொடர்பாக, டாக்டர் ரவி கூறியதாவது:

     சுற்றுலாப் பயணிகள், உள்ளூர் மக்களால் பெரிதும் விரும்பப்படும் ஊட்டி வர்க்கி தயாரிப்பில் பல்வேறு குறைபாடுகள் உள்ளதாக வந்த புகார்களையடுத்து நடத்தப்பட்ட சோதனையில், சர்ச்சைக்குரிய பொருள்களை வர்க்கி தயாரிப்பில் பயன்படுத்துவது தெரியவந்துள்ளது. இப்பொருள்கள் உடல்நலத்துக்கு தீங்கு விளைவிப்பவை என்பதால் அத்தகைய அடுமனைகளில் வர்க்கி தயாரிப்பை நிறுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

     ஊட்டி வர்க்கியில் மாட்டுக் கொழுப்பை அதிகளவில் பயன்படுத்துவதாக புகார் கூறப்பட்டுள்ளது. இதுதொடர்பாக, ஆய்வகத்துக்கு வர்க்கி மாதிரிகளை அனுப்பி அங்கிருந்து பெறப்படும் முடிவுகளை வைத்தே அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும். எனவே, வர்க்கி தயாரிப்பில் உள்ள அனைத்து அடுமனைகளும் உணவுப் பொருள்களை சுகாதாரமான முறையில், தரமானப் பொருள்களைக் கொண்டே தயாரிக்க வேண்டும் என்றார்.

     ஊட்டி வர்க்கி உதகையில் மட்டுமின்றி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் பெரிதும் விரும்பப்படும் உணவுப் பொருள் என்பதால் உதகையில் இதற்கு புவிசார் குறியீடு பெறுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

     இந்நிலையில், ஊட்டி வர்க்கி சுகாதாரமற்ற முறையில் தயாரிக்கப்படுவதாக வெளியான புகார்கள் காரணமாக புவிசார் குறியீடு பெறுவதில் சிக்கலை ஏற்பபடுத்தியுள்ளது.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai