Enable Javscript for better performance
குன்னூர்: தேயிலை பாரம் தூக்கும் தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் வாபஸ்- Dinamani

சுடச்சுட

    

    குன்னூர்: தேயிலை பாரம் தூக்கும் தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் வாபஸ்

    By குன்னூர்  |   Published on : 26th September 2015 06:01 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    குன்னூரில் கடந்த 15 நாள்களாக நடைபெற்று வந்த தேயிலை பாரம் தூக்கும் தொழிலாளர்களின் வேலைநிறுத்தப் போராட்டம் வெள்ளிக்கிழமை வாபஸ் பெறப்பட்டது.

    குன்னூரில் உள்ள தேயிலைக் கிடங்குகள் மேட்டுப்பாளையம், காரமடை ஆகிய இடங்களுக்கு மாற்றப்பட்டன. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தேயிலை பாரம் தூக்கும்  தொழிலாளர்கள் 200-க்கும் மேற்பட்டோர் கடந்த 15 நாள்களாக வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

    இதன்காரணமாக தேயிலைத் தொழிற்சாலைகள், கிடங்குகளில் ரூ. 20 கோடி மதிப்பிலான தேயிலைகள், தேயிலைத் தூள்கள் தேக்கமடைந்தன. இதனால், நீலகிரியில் தேயிலைத் தொழில் ஸ்தம்பிக்கும் நிலை ஏற்பட்டது.

    இதையடுத்து, வேலைநிறுத்தத்தை முடிவுக்கு கொண்டுவர மாவட்ட வருவாய் அலுவலர் பாஸ்கர பாண்டியன் முன்னிலையில் வெள்ளிக்கிழமை பேச்சுவார்த்தை நடைபெற்றது.

    அதில், தற்போது மேட்டுப்பாளையம், காரமடைப் பகுதிகளுக்கு கொண்டு செல்லப்பட்ட 35-க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகளின் தேயிலைகளைத் தவிர மேற்கொண்டு புதிய கிடங்குகள் அமைக்காமல் இருக்கவும், புதிதாக உருவாகி உள்ள  டீ பார்க்கிற்கு குன்னூரில் உள்ள சுமைப் பணித் தொழிலாளர்களை பயன்படுத்த ஒத்துழைப்பு அளிப்பதென்றும் உறுதியளிக்கப்பட்டது.

    இதையடுத்து, சுமைப் பணித் தொழிலாளர்களின் வேலைநிறுத்தப் போராட்டம் தாற்காலிகமாக கைவிடப்பட்டது.

    இந்தப் பேச்சுவார்த்தையில் குன்னூர் கோட்டாட்சியர் பழனிகுமார், வட்டாட்சியர் ஜான் மனோகர், தேயிலை வாரிய அதிகாரிகள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் ஆர்.பத்ரி, சிஐடியு மாவட்டச் செயலாளர் ஆல்துரை, தேயிலை பாரம் தூக்கும் தொழிலாளர் சங்கத் தலைவர் கிருஷ்ணமுர்த்தி, செயலாளர் சுரேஷ்  உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai