குன்னூர் அருகே கக்கன் நகர் மக்கள், குடிநீர்க் குழாய்களை சீரமைக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.
குன்னூர் அருகே கக்கன் நகர் குடியிருப்புப் பகுதியில் சுமார் 180-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதி உபதலை ஊராட்சியின்
6-ஆவது வார்டுக்கு உள்பட்டதாகும். இப்பகுதிக்கு, கரடிப் பள்ளத்திலிருந்து குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வந்தது. குடிநீர்ப் பற்றாக்குறை காரணமாக கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு அப்பகுதி மக்களால் அம்பிகாபுரத்தில் நிலம் வாங்கப்பட்டு, நமக்கு நாமே திட்டத்தின் கீழ் கிணறு அமைக்கப்பட்டது. இந்தக் கிணற்றிலிருந்து தண்ணீர் விநியோகிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், தற்போது பெய்த மழையின் காரணமாக கிணற்றில் தண்ணீர் உள்ளது. ஆனால், முறையாகத் தண்ணீர் விநியோகிக்கப்படுவதில்லை என்றும், அதன் காரணமாக தண்ணீர்த் தட்டுப்பாடு நிலவுவதாகவும் பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர். இது குறித்து கிராம நலச் சங்கம் சார்பில் குன்னூர் ஊராட்சி ஒன்றிய ஆணையாளருக்கு கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.
அதில் கூறியிருப்பதாவது: கடந்த 8-ஆம் தேதி வட்டார வளர்ச்சி அலுவலர் இப்பகுதிக்கு வந்து நிலைமையைக் கண்டறிந்தார். பழுதடைந்த குழாய்களை உடனடியாகச் சீரமைக்குமாறு ஊழியர்களுக்கு அறிவுறுத்தினார்.
இருப்பினும் இதுவரை குடிநீர்க் குழாய்கள் சீரமைக்கப்படவில்லை. எனவே, இப்பகுதி மக்களுக்கு சீரான முறையில் குடிநீர் வழங்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.