உதகையில் 2,306 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்: அமைச்சர் வேலுமணி வழங்கினார்

உதகையில் தமிழக அரசின் சார்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வழங்கினார். 

உதகையில் தமிழக அரசின் சார்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வழங்கினார். 
உதகை பழங்குடியினர் பண்பாட்டு மையத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு,  மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா தலைமை வகித்தார்.   மாநிலங்களவை உறுப்பினர் கே.ஆர்.அர்ஜுணன்,  மக்களவை உறுப்பினர் சி.கோபாலகிருஷ்ணன், குன்னூர் சட்டப்பேரவை  உறுப்பினர் சாந்தி ராமு  ஆகியோர் முன்னிலை வகித்தனர். 
நகராட்சி நிர்வாகம்,  ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி  ரூ. 6.09 கோடி மதிப்பில் கட்டப்பட்டு தயார் நிலையில் உள்ள 20 புதிய பணிகளை மக்கள் பயன்பாட்டுக்கு திறந்து வைத்தும், ரூ. 87.97 கோடி மதிப்பில் புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும்,  1,010 பயனாளிகளுக்கு ரூ.11.03 கோடி மதிப்பில் வீடுகள் கட்டும் பணிகளுக்கான ஆணைகளை வழங்கியும்,  2, 306  பயனாளிகளுக்கு ரூ.1.63 கோடி மதிப்பில் பல்வேறு துறைகளின் சார்பில் நலத்திட்ட உதவிகளையும் வழங்கி பேசியதாவது:
கடந்த 7 ஆண்டுகளில் நீலகிரி மாவட்டத்தில் நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத்துறையின் சார்பில் ஏராளமான பணிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. 
பசுமை வீடுகள் திட்டத்தின் கீழ் 53.87 கோடி மதிப்பீட்டில் 3,176 வீடுகள் கட்டப்பட்டுள்ளன.  இந்திரா நினைவு குடியிருப்புத் திட்டம், பிரதம மந்திரி குடியிருப்புத் திட்டத்தின் கீழ் ரூ. 46.22 கோடி மதிப்பீட்டில் 3,923 வீடுகளும்,  தனிநபர் இல்லக் கழிப்பறைத்திட்டத்தின் கீழ் ரூ.57.05 கோடி  மதிப்பீட்டில் 47,992 கழிப்பறைகளும் கட்டப்பட்டுள்ளன. 
ரூ. 4.71 கோடி மதிப்பீட்டில் 311  ஊரகப் பள்ளிகளில் புனரமைப்பு பணிகளும்,  ரூ.219 கோடி மதிப்பீட்டில் 282 சாலை பணிகளும் நிறைவேற்றப்பட்டுள்ளன.  தாய் திட்டத்தின்கீழ் ரூ. 27.25 கோடி  மதிப்பீட்டில் 1,156 பணிகளும், மக்களவை  உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ. 26 கோடி மதிப்பீட்டில் 525 பணிகளும், சட்டப் பேரவை உறுப்பினர் மேம்பாட்டு திட்டத்தின்கீழ் ரூ. 47 கோடி  மதிப்பீட்டில் 1,332 பணிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. 
ரூ. 9.68 கோடி மதிப்பீட்டில் 163 பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதோடு,  ரூ. 2 கோடி மதிப்பீட்டில் 10 அம்மா பூங்காக்கள், ரூ.1 கோடி  மதிப்பீட்டில் 10 அம்மா உடற்பயிற்சி கூடங்கள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
 கடந்த 7 ஆண்டுகளில் நீலகிரி மாவட்டத்திலுள்ள ஊராட்சி பகுதிகளில் மொத்தம் ரூ. 393 கோடி மதிப்பீட்டில்  47,931 பணிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. உதகை, குன்னூர், கூடலூர், நெல்லியாளம் ஆகிய நகராட்சிப் பகுதிகளில் சாலை,  குடிநீர், தெருவிளக்கு உள்ளிட்ட  2,715 பணிகள் ரூ.210.47 கோடி மதிப்பீட்டிலும், 11 பேரூராட்சிப் பகுதிகளில் ரூ.119 கோடி மதிப்பீட்டில் 1,743 பணிகளும் நிறைவேற்றப்பட்டுள்ளன. மேலும் ரூ.38.01 கோடி மதிப்பீட்டில் 172 சாலை பணிகள் செயல்படுத்தப்பட்டுள்ளன. முதல்வரின் சிறப்பு திட்டத்தின்கீழ் நீலகிரி மாவட்டத்தில் 2,04,357 மகளிருக்கு ரூ. 93 கோடி மதிப்பீட்டில் விலையில்லா மின்விசிறி, மிக்ஸி, மின்காந்த அடுப்புகள் வழங்கப்பட்டுள்ளன. 36,035 மாணவ, மாணவிகளுக்கு ரூ.48 .91 கோடி மதிப்பீட்டில் விலையில்லா மடிக்கணினிகள் வழங்கப்பட்டுள்ளன.
மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு இதுவரையில் ரூ.835 கோடி வங்கிக் கடனாக வழங்கப்பட்டுள்ளது. நடப்பாண்டில் இதுவரை 3,171 மகளிர் குழுக்களுக்கு ரூ.133 கோடி  கடன் இணைப்பாக வழங்கப்பட்டுள்ளது. 
மாவட்டத்தில் பொது சுகாதாரம், நோய் தடுப்புத் துறையின் சார்பில் ரூ.4.5 கோடியில் நவீன வசதிகளுடன் தரமான கல்வியும், பயிற்சியும் அளிக்க புதிய கட்டடமும்,  ரூ. 6 கோடியில் உதகை அரசு தலைமை மருத்துவமனை வளாகத்தில் தாய்சேய் நல பிரிவுக்கு புதிய கட்டடமும், ரூ.14.8 கோடியில் எமரால்டு பகுதியில் 30 கிராமங்கள் மற்றும் மலை கிராம மக்கள் பயன்பெறும் வகையில் விபத்து, அவசர சிகிச்சை மற்றும் கர்ப்பிணிகளுக்கு 24 மணி நேரமும் பிரசவ கவனிப்பு உள்ளிட்ட 50 படுக்கை வசதிகள் கொண்ட அரசு மருத்துவமனை ஆகியவற்றுக்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது என்றார்.  
இந்நிகழ்ச்சியில் சிறப்பு பகுதி மேம்பாட்டு திட்ட இயக்குநர் அமர் குஷ்வாகா, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சண்முகப் பிரியா, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் பாபு,  மாவட்ட வருவாய் அலுவலர் செல்வராஜ்  உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com