உதகையில் கொடி நாள் விழா

உதகையில்  நடைபெற்ற கொடிநாள் விழாவில் 26 பயனாளிகளுக்கு ரூ. 5.29 லட்சம் மதிப்பில்

உதகையில்  நடைபெற்ற கொடிநாள் விழாவில் 26 பயனாளிகளுக்கு ரூ. 5.29 லட்சம் மதிப்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா வழங்கினார்.
உதகை பழங்குடியினர் பண்பாட்டு மையத்தில் வெள்ளிக்கிழமை  நடைபெற்ற இந்த விழாவில்  ஆட்சியர்  பேசியதாவது:
 கொடிநாள் என்பது  ஆண்டுதோறும் டிசம்பர் 7 ஆம் தேதி நாடு முழுவதும் அனுசரிக்கப்படுகிறது. பாதுகாப்பு படைவீரர்கள் தங்களது இளமைக் காலத்தில் குடும்பத்தை விட்டு பிரிந்து பல்வேறு கடினமாக பணிகளை தன்னலம் கருதாது ஆற்றி வருகின்றனர். அவர்களது கண்துஞ்சா கடமைகளுக்கு நாம் காட்டும் நன்றியுணர்வின் வெளிப்பாடாக படைவீரர்களின் நலனுக்காகவும், அவர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும் வகையிலும் நாம் நிதி திரட்டி கொடிநாள் தொகையாக வழங்குவது வழக்கம். தமிழக அரசும் பல்வேறு நலத்திட்டங்களை முன்னாள் படைவீரர்கள் நலத்துறை மூலமாக செயல்படுத்தி வருகிறது.
மாவட்டத்தில் 1,944 முன்னாள் படைவீரர்களும், 789 முன்னாள் படைவீரர்களின் கைம்பெண்களும் இதுவரையில் தங்களது பெயர்களை பதிவு செய்துள்ளனர். இதில் இரண்டாம் உலகப் போரில் பணியாற்றி ஓய்வூதியம் பெறாத முன்னாள் படைவீரர்களுக்கு ஆயுள்கால நிதியுதவியாக ரூ. 6,000 வீதமும், கைம்பெண்களுக்கு ரூ.3,000 வீதமும், மனநலம் குன்றியோருக்கான நிதியுதவி, ஆதரவற்றோர் நிதியுதவி, கண் பார்வையற்றோர் நிதியுதவி, பக்கவாத நிதியுதவி என மாதம் ரூ. 3,000 வீதமும், ஓய்வூதியம் பெறாத முன்னாள் படைவீரர்களுக்கு ஆயுள்கால மாதாந்திர நிதியுதவியாக ரூ. 2,500 வீதமும் அவர்களது வாழ்நாள் வரையிலும், மாதந்தோறும் தமிழ்நாடு முன்னாள் படைவீரர் நல நிதியிலிருந்து மொத்தம் 44 நபர்களுக்கு கடந்த ஓராண்டில் ரூ.16.78 லட்சம் வழங்கப்பட்டுள்ளது.
மேலும் பல்வேறு திட்டங்கள் மூலம் 256 நபர்களுக்கு மொத்தம்  ரூ.30.2 லட்சம் வழங்கப்பட்டுள்ளது.  பிரதமரின் கல்வி உதவிதொகை திட்டத்தின் கீழ் தொழிற்நுட்ப, மருத்துவப் படிப்புகளுக்கு  2017 ஆம் ஆண்டில் 18 நபர்களுக்கு ரூ.4.78 லட்சம் வழங்கப்பட்டுள்ளது. மாநில மற்றும் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் 28 முன்னாள் படைவீரர்களும், தனியார் நிறுவனங்களில் 10-க்கும் மேற்பட்டவர்களும், அரசு நிறுவனங்களில் 27 முன்னாள் படைவீரர்களும் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.  
மேலும் தொகுப்பு நிதியாக தமிழ்நாட்டிலிருந்து தங்களது பிள்ளைகளை ராணுவப் பணிக்கு அனுப்பி வைக்கும் முன்னாள் படைவீரர்களை ஊக்குவிக்கும் பொருட்டு நிதியுதவி வழங்கப்பட்டு வருகிறது. இதன் கீழ் முன்னாள் படைவீரர்களுக்கு தலா ரூ.1.5 லட்சம் வழங்கப்பட்டுள்ளது.  கடந்த 2017 ஆம் ஆண்டு ரூ. 57.,84லட்சம், இந்த ஆண்டு  இதுவரை ரூ.10.63 லட்சமும் கொடிநாள் தொகையாக திரட்டப்பட்டுள்ளது என்றார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சண்முகப் பிரியா,  முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குநர் சரவணன்,  இந்திய செஞ்சிலுவை சங்க செயலர் கேப்டன் கே.ஆர்.மணி  உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com