உதகை உருளைக்கிழங்கு ஆராய்ச்சி மையத்தை மூடக்கூடாது

உதகையில் உருளைக்கிழங்கு ஆராய்ச்சி மையத்தை மூடும் நடவடிக்கையை மத்திய அரசு கைவிட வேண்டும்என்று பாட்டாளி மக்கள் கட்சியின் மாநிலத்


உதகையில் உருளைக்கிழங்கு ஆராய்ச்சி மையத்தை மூடும் நடவடிக்கையை மத்திய அரசு கைவிட வேண்டும்என்று பாட்டாளி மக்கள் கட்சியின் மாநிலத் தலைவர் ஜி.கே.மணி கூறினார்.
பாட்டாளி மக்கள் கட்சியின் திருப்பூர் மாநகர் மாவட்ட பொதுக் குழுக்கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. இதில், பங்கேற்ற அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது:
கஜா புயல் தாக்கிய டெல்டா மாவட்டங்களில் மக்கள் இன்னும் துயரத்தில் இருந்து மீளவில்லை. நிவாரணப் பணிகளை மத்திய, மாநில அரசுகள் போர்க்கால அடிப்படையில் துரிதப்படுத்த வேண்டும். மாநில அரசு கேட்ட நிவாரணத் தொகையை மத்திய அரசு வழங்க வேண்டும். மேக்கேதாட்டுவில் அணை கட்ட விரிவான அறிக்கை தயாரிக்க வழங்கிய அனுமதியை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும்.
பின்னலாடைத் தொழிலாளர்களுக்கு கடந்த அக்டோபர் மாதத்தில் இருந்து டிராபேக்கை நிறுத்திவிட்டனர். இதனால் 30 சதவீத அளவுக்கு உற்பத்தி குறைந்துவிட்டது. இதனால் ஏற்றுமதியும் குறைந்துவிட்டது. இதுதொழில் துறையில் தமிழகத்துக்கு ஏற்பட்டுள்ள பின்னடைவாகும். எனவே, திருப்பூர், கோவை மாவட்டங்களில் பின்னலாடை, டெக்ஸ்டைல் தொழில் குறித்து மத்திய அரசு அதிக அக்கறை கொள்ளவேண்டும்.
மாநகராட்சிப் பகுதிகளில் குடிநீர் கட்டணம், வீட்டுவரி, கடை வரி உயர்த்தப்பட்டுள்ளது. புதிதாக குப்பை வரி, பாதாள சாக்கடை வரி விதிக்கின்றனர். இதனால் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதிக்கப்படுகின்றனர்.
மேற்கு மண்டலத்தில் பாசனத் திட்டங்களை தமிழக அரசு முறையாக செயல்படுத்த வேண்டும். தமிழகத்தில் 20 நீர்ப் பாசன திட்டங்களை நிறைவேற்றினால் குடிநீர்ப் பிரச்னையே வராது. மேற்கு மாவட்ட மக்களின் நீண்டநாள் கோரிக்கையான அத்திக்கடவு-அவிநாசி திட்டம், ஆனைமலை -நல்லாறு திட்டத்தை நிறைவேற்ற வேண்டும். பாண்டியாறு -புன்னம்புழா, பரம்பிக்குளம் -ஆழியாறு திட்டங்களை மேம்படுத்த வேண்டும்.
உயர் மின் கோபுரங்களை பூமிக்கு அடியில் கேபிள் மூலமாக எடுத்துச் செல்ல வேண்டும். உதகையில் உள்ள உருளைக்கிழங்கு ஆராய்ச்சி மையத்தை மூடும் நடவடிக்கையை மத்திய அரசு கைவிட வேண்டும் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com