விளையாட்டு வீரர்களுக்கு தமிழக அரசு பாரபட்சம் காட்டுவதில்லை: தடகள சங்கத்தின் துணைத் தலைவர் ஷைனி வில்சன்

விளையாட்டு வீரர்களுக்கு பரிசுத் தொகை வழங்குவதில் தமிழக அரசு எவ்வித பாரபட்சமுமம் காட்டுவதில்லை என இந்திய தடகள வீராங்கனையும், தமிழ


விளையாட்டு வீரர்களுக்கு பரிசுத் தொகை வழங்குவதில் தமிழக அரசு எவ்வித பாரபட்சமுமம் காட்டுவதில்லை என இந்திய தடகள வீராங்கனையும், தமிழக தடகள சங்கத்தின் துணைத் தலைவருமான ஷைனி வில்சன் தெரிவித்தார்.
உதகையில் உள்ள கிரசண்ட் பள்ளியின் ஆண்டு விழா நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக வந்திருந்த அவர் சனிக்கிழமை செய்தியாளர்களிடம் கூறியாதாவது:
இந்தியாவில் தற்போது விளையாட்டுத் துறையில் ஏராளமானோர் சாதித்து வருகின்றனர். நடந்து முடிந்த ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இந்திய விளையாட்டு வீரர்கள் சிறந்த முறையில் விளையாடி பதக்கங்களை பெற்றுள்ளனர். தமிழக அரசும் விளையாட்டு வீரர்களுக்கு ஊக்கம் அளிக்கிறது. சாதித்தவர்களுக்கு ரூ.10 லட்சம் முதல் ரூ.25 லட்சம் வரை ஊக்கத் தொகையும் வழங்கப்படுகிறது. விளையாட்டு வீரர்களுக்கு பரிசுத் தொகை வழங்குவதில் தமிழகத்தில் எவ்வித பாராட்சமும் காட்டுவதில்லை.
நீலகிரி போன்ற மலைப் பகுதிகளில் பயிற்சி பெற்றால் விளையாட்டு வீரர்கள் இன்னும் சாதிக்க முடியும். உதகையில் தற்போது ஹை ஆல்ட்டிடியூட் பயிற்சி மையம் அமைக்கப்பட்டு வருவதைப்போல் மூணாறு, கொடைக்கானல் போன்ற பகுதிகளிலும் பயிற்சி தளங்கள் அமைக்கப்பட வேண்டும். நாங்கள் நீலகிரியில் பயிற்சி பெற்ற பின்னரே ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் சாதித்தோம். தமிழகத்தின் பிற பகுதிகளில் உள்ள விளையாட்டு வீரர்களுக்கு உதகையில் அமைக்கப்பட்டுவரும் சிந்தெடிக் ஓடுதளத்தில் பயிற்சி அளிக்க வேண்டும்.
தற்போது ஏராளமான பெண் பயிற்சியாளர்கள் வந்துவிட்டனர். அதனால் பெண் விளையாட்டு வீராங்கனைகளுடன் ஒரு பெண் பயிற்சியாளர் செல்ல வேண்டும் என்ற உத்தரவு உள்ளது. இதனால், பெண் விளையாட்டு வீராங்கனைகளுக்கு எவ்வித தொல்லைகளும் இல்லை.
மத்திய, மாநில அரசுகள் இணைந்து அனைத்துப் பகுதிகளிலும் சிந்தெடிக் ஓடுதளம் அமைக்க வேண்டும். இதன் மூலம் விளையாட்டு வீரர்கள் பயிற்சிக்காக தொலை தூரங்களுக்கு செல்ல வேண்டியிருக்காது. அவர்களது சொந்த ஊரிலேயே பயிற்சி பெற முடியும். தற்போது இளைஞர்கள் விளையாட்டில் அதிக அளவில் ஆர்வம் காட்டுகின்றனர். விளையாட்டுத் துறையில் சாதித்தவர்களுக்கு மத்திய, மாநில அரசுகளில் பணி வழங்கப்படுகிறது.
ஒலிம்பிக்கில் தடகளப் போட்டிகளில் இதுவரை இந்தியா பதக்கம் வென்றதில்லை. நாங்கள் 1984ல் இறுதிப்போட்டி வரை வந்தோம். ஆனால் வெற்றி பெற முடியவில்லை. இனி வரும் விளையாட்டு வீரர்கள் தடகளப் போட்டிகளில் ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்ல வேண்டும் என்பதே எங்கள் ஆசை என்றார்.
பேட்டியின்போது கிரசண்ட் பள்ளி தாளாளர் ஜி.உமர் பாரூக், இந்திய ஹாக்கி அமைப்பின் முதல் பெண் நடுவரானஅனுபமா ஆகியோர் உடனிருந்தனர்.
கிரசண்ட பள்ளி ஆண்டு விழா நிகழ்ச்சியில் பங்கேற்று பள்ளி மாணவ, மாணவியருக்குப் பரிசுகளை வழங்கிய அவர், தொடர்ந்து உதகையில் உள்ள மலைப் பகுதி மேம்பாட்டுத்திட்ட திறந்தவெளி அரங்கில் அமைக்கப்பட்டுவரும் சிந்தெடிக் ஓடுதளத்தை பார்வையிட்டு ஆலோசனைகளை வழங்கினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com