Enable Javscript for better performance
தேயிலைச் செடிகளில் கொப்புள நோய்: விவசாயிகள் கவலை- Dinamani

சுடச்சுட

    

    மஞ்சூர் சுற்றுவட்டாரப் பகுதியில் மேகமூட்டம் அதிகரித்து வருவதால் தேயிலைச் செடிகளில் கொப்புள நோய் ஏற்பட்டு வருகிறது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
    மஞ்சூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த ஆண்டு எதிர்பாரத வகையில் வடகிழக்கு, தென்மேற்குப் பருவ மழை போதுமான அளவில் பெய்யவில்லை. ஆனால், வழக்கத்துக்கு மாறாக மாவட்டம் முழுவதும் மேகமூட்டத்துடன் கூடிய பனிப் பொழிவு நிலவி வருகிறது.  பலத்த மழை பெய்யாவிட்டாலும் பகல் நேரத்தில் சூரிய வெளிச்சம் குறைவாக இருந்ததால் தேயிலைச் செடிகளில் கொப்புள நோய் ஏற்பட்டு, மகசூல் வெகுவாக குறைந்தது. 
    இந்நிலையில், கடந்த சில நாள்களாக மஞ்சூர், எடக்காடு, பிக்கட்டி, கைகாட்டி, தாய்சோலை, அப்பர்பவானி உள்ளிட்ட பகுதிகளில் நீர், உறை பனியின் தாக்கம் அதிகரித்தது. இதனால், 1,000 ஏக்கர் பரப்பளவிலான தேயிலைச் செடிகள் கருகியதுடன் மலைத் தோட்டக் காய்கறிப் பயிர்களும் பாதிப்புக்குள்ளாகின. 
    இதனால் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், கடந்த 2 நாள்களாக மேகமூட்டத்துடன் கூடிய சாரல் மழை நீடித்து வருகிறது. பனிக் காலத்தில் மழைச் சாரல் நீடிப்பதால் கடும் குளிரும் நிலவி வருகிறது. இதனால் பகல் நேரத்திலேயே மக்கள் தீ மூட்டி குளிர் காய்ந்து வருகின்றனர்.
    மேலும், மலைப் பாதைகளில் மேகமூட்டம் அதிகரித்ததால் வாகனங்கள் பகல் நேரத்திலேயே முகப்பு விளக்குகளை எரியவிட்டவாறு மெதுவாக ஊர்ந்து செல்கின்றன.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai