Enable Javscript for better performance
உதகை அருகே சட்ட விழிப்புணர்வு முகாம்- Dinamani

சுடச்சுட

    

    உதகை அருகே சட்ட விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. 
    உதகை அருகேயுள்ள பாகல்கோடு மந்து பகுதியில்  நீலகிரி மாவட்ட  சட்டப் பணிகள் ஆலோசனைக் குழு சார்பில் சட்ட விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஹுலுவாடி  ஜி.ரமேஷ் தலைமை வகித்து பேசியதாவது:
    சட்ட விழிப்புணர்வு முகாம்கள் பழங்குடியின மக்களுக்கு மிகவும் அவசியமானதாகும்.  தண்ணீர், சுகாதாரம் மற்றும் கல்வியறிவு ஆகியவற்றில் கூடுதல் கவனம் செலுத்தப்பட  வேண்டும். அரசு பிற்படுத்தப்பட்ட மக்களுக்காக கல்வி வழங்குவதற்காகவும் பல்வேறு திட்டங்களை தீட்டியுள்ளது.  இம் முகாம்களின் மூலம் குடிமகன்களின் கடமைகள் பாதுகாக்கப்படுகின்றன.  நாட்டில் கல்வி, வேலைவாய்ப்பு அனைவருக்கும் கிடைக்க வேண்டும்.
    பெரும்பாலான பகுதிகளில் சாலை வசதிகளும், குடிநீர் வசதிகளும் திருப்திகரமாக இல்லை. இதற்கு மாவட்ட ஆட்சியரும்,  மாவட்ட காவல் கண்காணிப்பாளரும் உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.  வனங்களை அழிவிலிருந்துக் காப்பாற்ற வேண்டும்.  இதற்கு பழங்குடியினர் உறுதுணையாக இருப்பதோடு  சுற்றுச்சூழலையும் பாதுகாக்க வேண்டும். கல்வி அனைவருக்கும் வேண்டும். அதனால் நன்கு படித்து வேலை பார்க்க வேண்டும். பழங்குடியின சமூகத்திலிருந்து ஒருவர் உயர் அதிகாரியானால்தான் அவருக்கு அச் சமூகத்தின் கஷ்டங்கள் புரியும்.  அவரும் பழங்குடியினர் நலனுக்காகவே பாடுபடுவார்.  அதனால் அனைவரும் கட்டாயமாகக் கல்வி கற்க வேண்டும்  என்றார். 
    முகாமில் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆர்.சதீஷ்குமார் பேசியதாவது:  சட்ட விழிப்புணர்வு முகாம்களின் போது கொடுக்கப்படும் விண்ணப்பங்கள் மீது  உடனுக்குடன் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.  குடும்ப வன்முறைகளைக் கட்டுப்படுத்த மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகியோர் உரிய விழிப்புணர்வு முகாம்களை நடத்த வேண்டும்.  ஒவ்வொருவரின் தனித்துவத்தையும் தக்கவைக்க கல்வி அறிவு மிகவும் அவசியம் என்றார். 
    மேலும், மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா,  மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முரளி ரம்பா, மாவட்ட நீதிபதி வடமலை ஆகியோருடன் வழக்குரைஞர்கள் சங்க நிர்வாகிகளும்,  மூத்த வழக்குரைஞர்களும், பழங்குடியின சமுதாய தலைவர்களும் பங்கேற்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai