Enable Javscript for better performance
பசுந்தேயிலை வரத்து அதிகரிப்பால் கோட்டா முறை அமல்- Dinamani

சுடச்சுட

    

    பசுந்தேயிலை வரத்து அதிகரித்துள்ளதால் மங்சூர், குந்தா, பிக்கட்டி கூட்டுறவு தொழிற்சாலைகளில் கோட்டா முறை அமல்படுத்தப்பட்டுள்ளது.
       நீலகிரி மாவட்டத்தில் தேயிலை விவசாயம் முக்கியத் தொழிலாக உள்ளது. மஞ்சூர், பிக்கட்டி,  கிண்ணக்கொரை, குந்தா, கைகாட்டி, மகாலிங்கா, இத்தலார், மேற்குநாடு உள்ளிட்ட கூட்டுத் தொழிற்சாலைகளும் ஏராளமான தனியார் தொழிற்சாலைகளும் உள்ளன.  கூட்டுறவுத் தொழிற்சாலைகளில் மட்டும் சுமார் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் உறுப்பினர்களாக உள்ளனர். இவர்களிடம் இருந்து தினமும் கொள்முதல் செய்யப்படும் பசுந்தேயிலையால் கூட்டுறவு தொழிற்சாலைகளில் தேயிலைத் தூள் உற்பத்தி செய்யப்படுகிறது. 
     இந்நிலையில், மஞ்சூர் உள்பட குந்தா வட்டாரப் பகுதிகளில் நடப்பு ஆண்டின் தொடக்கத்தில் இருந்து போதிய மழை பெய்யாததால் கடும் வறட்சி நிலவியது. இதனால், தேயிலைத் தோட்டங்களில் மகசூல் கடுமையாக பாதிக்கப்பட்டது. பசுந்தேயிலை வரத்து குறைந்ததால் தொழிற்சாலைகளில் உற்பத்தி பாதிக்கப்பட்டது.
     இந்நிலையில், கடந்த 15 நாள்களாக  பரவலாக மழை பெய்து வருகிறது. பகல் நேரத்தில் வெயிலும், இரவு நேரத்தில் மழையும் பெய்கிறது. தேயிலை விவசாயத்திற்கு ஏற்றவாறு காலநிலை நிலவுவதை அடுத்து கடந்த சில தினங்களாக தேயிலை மகசூல் அதிகரித்து வருகிறது. பசுந்தேயிலை வரத்து பல மடங்கு உயர்ந்துள்ளது.  மங்சூர் கூட்டுறவுத் தொழிற்சாலைகளில்  தினமும் தேயிலைத் தூள் உற்பத்தித் திறன் 22 ஆயிரம் கிலோவாக உள்ள நிலையில் தற்போது பசுந்தேயிலை வரத்து இரு மடங்கு அதிகரித்துள்ளது. இதனால் உடனுக்குடன் தேயிலைத் தூள் உற்பத்தியை மேற்கொள்ள முடியாமல் திண்டாட்டம் ஏற்படுகிறது. இந்நிலையில், அதிகப்படியான பசுந்தேயிலை வரத்தை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக பசுந்தேயிலை கொள்முதலில் கோட்டா முறையை அமல்படுத்த நிர்வாக தரப்பில் முடிவு செய்யப்பட்டது.
        இதுகுறித்து தொழிற்சாலை மேலாண்மை இயக்குநர் கணபதி வெளியிட்டுள்ள செய்தி:
     பசுந்தேயிலை வரத்து அதிகரிப்புக் காரணமாக வரும் 15ஆம் தேதி முதல் கோட்டா முறையில் பசுந்தேயிலை கொள்முதல் செய்யப்படும். அங்கத்தினர்களுக்கு  தொழிற்சாலைமூலம் கோட்டா அட்டைகள் வழங்கப்படும். கோட்டாஅட்டை இல்லாத அங்கத்தினர்களிடம் இருந்து எக்காரணம் கொண்டும் பசுந்தேயிலை கொள்முதல் செய்யப்படமாட்டாது.  எனவே, அங்கத்தினர்கள் அனைவரும் நிர்வாகத்திற்கு ஒத்துழைப்பு தர வேண்டும் எனக் கேட்டுக்கொள்ளப்படுகிறது.
       மஞ்சூர் அருகே உள்ள குந்தா (எடக்காடு), பிக்கட்டி கூட்டுறவுத்  தொழிற்சாலைகளில் பசுந்தேயிலை வரத்து அதிகரித்துள்ளதால் பசுந்தேயிலை கொள்முதல் செய்ய கோட்டா  முறை அமல்படுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக அங்கத்தினர்களாக உள்ள விவசாயிகளிடம் இருந்து குறிப்பிட்ட அளவுக்குத்தான் பசுந்தேயிலை கொள்முதல் செய்யப்படுகிறது.


     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai