மின் உற்பத்திக்கு ஆதாரமான குந்தா, கெத்தை அணைகளை தூர்வார வலியுறுத்தல்

குந்தா, கெத்தை அணைகளைத் தூர்வார வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

குந்தா, கெத்தை அணைகளைத் தூர்வார வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் குந்தா, பைக்காரா நீர்மின் திட்டங்கள் மூலம் 12 நீர்மின் நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. 
மேல் பவானி, அவலாஞ்சி, எமரால்டு, கிளன்மார்கன், பைக்காரா உள்ளிட்ட 15க்கும் மேற்பட்ட அணைகளில் தேக்கி வைக்கப்படும் நீர் மூலம் மின்நிலையங்களில் மொத்தம் 833.65 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.
இந்நிலையில், குந்தா நீர்மின் திட்டத்தின் கீழ் உள்ள மேல் பவானி அணையில் இருந்து அவலாஞ்சி மின்நிலையத்துக்குக் கொண்டு செல்லப்படும் நீர் மின் உற்பத்திக்குப் பின்னர் அவலாஞ்சி , எமரால்டு அணைகளில் தேக்கி வைக்கப்படுகிறது. பின்னர் இங்கிருந்து ராட்சத குழாய்கள் மூலம் குந்தா மின் நிலையத்துக்கு நீர் கொண்டு செல்லப்படுகிறது. இங்கு 60 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. 
பின்னர் வெளியேற்றப்படும் நீர் குந்தா அணையில் தேக்கி வைக்கப்பட்டு, சுரங்கப்பாதை வழியாக கெத்தை மின் நிலையத்துக்குக் கொண்டு செல்லப்படுகிறது. இங்கு, 150 மெகாவாட் மின் சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. கெத்தை மின் நிலையத்தில் இருந்து மின் உற்பத்திக்குப் பின் வெளியேற்றப்படும் நீர் சுரங்கப்பாதை வழியாக பரளி மின் நிலையத்துக்குக் கொண்டு செல்லப்படுகிறது. இங்கு 80 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.
குந்தா, கெத்தை மற்றும் பரளி மின்நிலையங்களில் மின்சார உற்பத்திக்கு முக்கிய நீராதாரமாக உள்ள குந்தா மற்றும் கெத்தை அணைகள் தூர்வாரப்படாததால் அதிக அளவில் சேறும், சகதியும் தேங்கியுள்ளன. கடந்த சில மாதங்களாகப் பெய்த மழையின்போது மழை நீரில் அடித்துவரப்பட்ட செடி, கொடிகள் உள்ளிட்ட கழிவுகள் அணைகளில் தேங்கியுள்ளன. 
அணைகளில் அதிக அளவில் சேறும், சகதியும் தேங்கி இருப்பதால் குறைந்தபட்ச மழை பெய்தாலே அணைகள் நிரம்பிவிடும் என நிலையில் காணப்படுகின்றன. 
சகதிகளால் குந்தா அணையில் அமைந்துள்ள சுரங்கப்பாதையில் அடிக்கடி அடைப்பு ஏற்படுகிறது. இதனால் கெத்தை மின்நிலையத்துக்கு நீர் கொண்டு செல்வதில் தடை ஏற்பட்டு மின் உற்பத்தியில் பாதிப்பு ஏற்படுகிறது. 
கடந்த மாதம் குந்தா அணையில் உள்ள சுரங்கப்பாதையில்அடைப்பு ஏற்பட்டு கெத்தை மின்நிலையத்துக்கு நீர் கொண்டு செல்வதில் தடை ஏற்பட்டு 5 நாள்களுக்கு மேலாக மின் உற்பத்தி நிறுத்தப்பட்டிருந்தது. 
இதையடுத்து, குந்தா அணையில் இருந்து முழுவதுமாக நீர் வெளியேற்றப்பட்டு, சுரங்கப்பாதையில் அடைப்பு நீக்கப்பட்டது. அணை நீர் முழுவதும் வெளியேற்றப்பட்ட நிலையில் சேறும், சகதியும் அதிக அளவில் இருப்பது தெரியவந்தது. 
குந்தா அணையைத் தூர்வாருவதற்காக அணையில் தேங்கியிருக்கும் சேறு, சகதி அளவு குறித்து மதிப்பீடு செய்யும் பணி கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் மேற்கொள்ளப்பட்டது. 
ஆனால், இதுவரை அணையைத் தூர்வார எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே, குந்தா, கெத்தை அணைகளை விரைவில் தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும் என மின் வாரிய ஊழியர்கள் வலியுறுத்தி உள்ளனர். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com