உதகை கோடை விழா போட்டிகளுக்கு விண்ணப்பிக்க அழைப்பு
By DIN | Published On : 12th April 2019 08:41 AM | Last Updated : 12th April 2019 08:41 AM | அ+அ அ- |

உதகை கோடை சீசனையொட்டி நடத்தப்படும் மலர்க் காட்சி, ரோஜா கண்காட்சி, காய்கறிக் கண்காட்சி உள்ளிட்டவற்றுக்காக நடத்தப்படும் தோட்டப் போட்டிகளில் பங்கேற்க விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்ட தோட்டக்கலை இணை இயக்குநர் சிவசுப்பிரமணியம் சாம்ராஜ் தெரிவித்துள்ளதாவது:
உதகை அரசினர் தாவரவியல் பூங்காவில் 123வது மலர்க்காட்சி மே மாதம் 17ஆம் தேதி முதல் 21ஆம் தேதி வரை 5 நாள்களுக்கு நடத்தப்படுகிறது. இம்மலர்க்காட்சியை முன்னிட்டு நீலகிரி மாவட்டத்திலுள்ள சிறந்த இயற்கை காய்கறித் தோட்டங்கள், ரோஜாப் பூங்காக்கள், மலர்ப் பூங்காக்களுக்கு பரிசு வழங்கப்பட உள்ளது. மலர்ப் பூங்காக்கள் மற்றும் காய்கறித் தோட்டப் போட்டிகளுக்கான விண்ணப்ப படிவங்கள் ஏப்ரல் 15ம்தேதி முதல் 25ம்தேதி வரை உதகை அரசினர் தாவரவியல் பூங்கா, குன்னூர் சிம்ஸ் பூங்கா, கோத்தகிரி மற்றும் கூடலூர் தோட்டக்கலை உதவி இயக்குநர் அலுவலகங்களில் அனைத்து வேலை நாள்களிலும் பெற்றுக் கொள்ளலாம்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை உதகையில் அரசினர் தாவரவியல் பூங்காவிலுள்ள தோட்டக்கலை உதவி இயக்குநர் அலுவலகத்தில் ஏப்ரல் 25ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். அத்துடன் ஒரு பதிவுக்கு கட்டணத் தொகையாக ரூ. 100 செலுத்தப்பட வேண்டும்.
சிறந்த தோட்டங்கள் மற்றும் பூங்காக்களைத் தேர்வு செய்யும் குழுவினர், மே மாதம் 2ஆம் தேதி முதல் 7ஆம் தேதி வரை உதகை, குன்னூர், கோத்தகிரி, கூடலூர் பகுதிகளில் பார்வையிட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதுதொடர்பான கூடுதல் விபரங்களுக்கு, உதகையில் அரசினர் தாவரவியல் பூங்காவிலுள்ள தோட்டக்கலை உதவி இயக்குநர் அலுவலகத்தை நேரில் அணுகியோ, 0423- 2442545 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டோ பெற்றுக் கொள்ளலாம்.