மக்களவைத் தேர்தல்: நீலகிரி மாவட்டத்துக்கு பலத்த பாதுகாப்பு: எஸ்.பி. தகவல்

மக்களவைத் தேர்தலை முன்னிட்டு நீலகிரி மாவட்டத்தில் கேரள, கர்நாடக மாநில எல்லைகளையொட்டியுள்ள

மக்களவைத் தேர்தலை முன்னிட்டு நீலகிரி மாவட்டத்தில் கேரள, கர்நாடக மாநில எல்லைகளையொட்டியுள்ள பகுதிகளில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சண்முகப்பிரியா தெரிவித்தார்.
உதகையில் காவல்துறையினருக்கு செவ்வாய்க்கிழமை தேர்தல் பணி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதில் பங்கேற்ற பின்னர் செய்தியாளர்களிடம் சண்முகப்பிரியா கூறியதாவது:
நீலகிரி மாவட்டம் மூன்று மாநில எல்லைப் பகுதியில் அமைந்துள்ளது. இம்மாவட்டத்தில் 16 எல்லையோர சோதனைச் சாவடிகள் உள்ளன. அனைத்து சோதனைச் சாவடிகளிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. 
கேரளத்தின் மலப்புரம், வயநாடு, பாலக்காடு, கர்நாடகத்தின் சாம்ராஜ் நகர் ஆகிய பகுதிகள் நீலகிரி மாவட்டத்தின் எல்லையோரத்தில் அமைந்துள்ளன.
இப்பகுதிகளில் மாவோயிஸ்டுகளின் நடமாட்டம்  அதிகளவில் உள்ள நிலையில்,  மக்களவைத்  தேர்தலை புறக்கணிக்க வேண்டுமெனவும் கோரிக்கைகள் விடுக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் நீலகிரி மாவட்டத்தில் உள்ள மக்களில், குறிப்பாக பழங்குடியின மக்கள் தைரியமாக வாக்களிக்க வேண்டும் என்ற நம்பிக்கையை உருவாக்கும் வகையில் அதிரடிப் படையினர், நக்ஸல் தடுப்பு பிரிவினர் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். 
கேரளத்தில் ஜலீல் என்ற மாவோயிஸ்டு சுட்டு கொல்லப்பட்ட பிறகு, அங்கு தேர்தலை புறக்கணிக்கக் கோரி பல இடங்களில் போஸ்டர்கள் ஒட்டி வருகின்றனர். நீலகிரி மாவட்டத்துக்குள் அவர்கள் நுழைந்து மக்களை அச்சுறுத்தக் கூடாது என்பதற்காக 200 அதிரடிப்படையினர், நக்ஸல் தடுப்பு பிரிவில் 50 பேர், கமாண்டோ பயிற்சி முடித்த 44 பேர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
முக்கிய இடங்களில் அவர்கள் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். சுமார் 240 கி.மீ. தூர மாவட்ட எல்லை கண்காணிப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. தேர்தல் பாதுகாப்புப் பணிக்காக சி.ஏ.பி.எப். ஒரு கம்பெனியும்,  தமிழ்நாடு சிறப்பு காவல் படை ஒரு கம்பெனியும்  நீலகிரிக்கு  வந்துள்ளனர். இவர்களுடன் உள்ளூர் போலீஸார் 1,400 பேரும் தேர்தல் பணியில் ஈடுபட உள்ளனர் என்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com