புதர் மண்டி கிடக்கும் காவலர் குடியிருப்பு: வன விலங்குகள் நடமாட்டத்தால் பொதுமக்கள் அச்சம்
By DIN | Published On : 04th August 2019 10:50 AM | Last Updated : 04th August 2019 10:50 AM | அ+அ அ- |

கோத்தகிரி காவலர் குடியிருப்பு அருகே புதர் மண்டி கிடப்பதால் வன விலங்குகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளதால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
கோத்தகிரி பேரூராட்சிக்கு உள்பட்ட பேருந்து நிலையம் பகுதியில் காவலர் குடியிருப்பு அமைந்துள்ளது. குடியிருப்பை ஒட்டி 50க்கும் மேற்பட்ட வீடுகளும் அமைந்துள்ளன.
மையப்பகுதியில் நீரூற்றும் உள்ளது. இப்பகுதியில், காட்டுச் செடிகள் ஆக்கிரமித்து பல ஆண்டுகளாக அகற்றப்படாமல் உள்ளது. இதனால், அப்பகுதியில் காட்டுப்பன்றி, கரடி, சிறுத்தை மற்றும் காட்டெருமை உள்ளிட்ட வன விலங்குகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளதால் காவலர் மற்றும் பொதுமக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
மேலும், குழந்தைகளை தனியே விட்டுச் செல்லவும் அச்சப்படுகின்றனர்.
இது தவிர அப்பகுதி முழுவதும் துர்நாற்றத்துடன் சுற்றுச்சூழலும் பாதிக்கப்பட்டுள்ளதால் குடியிருப்புவாசிகள் பல்வேறு சிரமங்களுக்கு ஆளாகி வருகின்றனர்.
எனவே, வனத் துறையினர் இப்பகுதியில் ஆய்வு செய்து விலங்குகளை விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், பேரூராட்சி நிர்வாகம் இப்பகுதியில் ஆக்கிரமித்துள்ள காட்டுச் செடிகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...